பள்ளி மாணவர்கள் பதவி ஏற்பு

ரிஷிவந்தியம் : சூளாங்குறிச்சியில் ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பதவி ஏற்பு விழா நடந்தது.

கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி நிறுவனர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். தாளாளர் ஜனனி செந்தில்குமார் முன்னிலை வகித்தார். தேர்தலின் முக்கியத்தும், தேர்தல் விதிமுறை, பிரசாரம் செய்யும் விதம், ஓட்டுப்போடுவதன் அவசியம் மற்றும் தலைமை பண்பினை சிறு வயதிலேயே உணர்த்திடும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதற்காக, 4 குழுக்கள் பிரிக்கப்பட்டு, மாணவ தலைவர், மாணவி தலைவி, கலாசார செயலாளர், விளையாட்டு தலைவர் என 13 பதவிகள் உருவாக்கப்பட்டது.

தேர்தலில் போட்டியிட 27 மாணவ, மாணவிகள் விருப்பம் தெரிவித்து வேட்பு மனு அளித்து, பள்ளியில் பிரசாரம் செய்தனர்.

தொடர்ந்து, கடந்த ஜூலை 11ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் பதவி ஏற்பு விழா நேற்று நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்கள் உறுதிமொழி வாசித்து பதவி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி, துணை முதல்வர் பாபு, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement