சசிதரூர் எங்களில் ஒருவர் கிடையாது; காங். தலைவர் திட்டவட்டம்

திருவனந்தபுரம்: சசிதரூர் எங்களில் ஒருவர் அல்ல என்று கேரள மாநில காங். மூத்த தலைவர் முரளீதரன் கூறி உள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பி.,யுமாக இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர், சமீப காலமாக பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் வெகுவாக பாராட்டி வருகிறார்.
அவரின் செயலுக்கு காங்கிரசில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அக்கட்சியின் முக்கிய தலைவர்கள், சசிதரூருக்கு கண்டனம் தெரிவித்தாலும், விமர்சனம் செய்தாலும் அதனை சசிதரூர் கண்டுகொள்ளவில்லை.
இந் நிலையில், கேரள மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் முரளீதரன், சசிதரூர் பற்றி குறிப்பிட்ட ஒரு கருத்து பெரும் விவாதத்தை எழுப்பி உள்ளது. அவர் மேலும் கூறியதாவது;
அவர்(சசிதரூர்) தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் வரை, எந்தவொரு கட்சி நிகழ்ச்சிக்கும் அழைக்க மாட்டோம். கட்சியின் செயற்குழு உறுப்பினராக இருக்கும் சசிதரூர், நம்மில் ஒருவர் இல்லை. அவருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை கட்சி தலைமை தான் முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.