டில்லிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறால் ரத்து; பயணிகள் கடும் அவதி

1

ராஞ்சி: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ராஞ்சியில் இருந்து டில்லிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ரத்து செய்யப்பட்டது.



ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து தலைநகர் டில்லிக்கு இன்று (ஜூலை 20) மாலை 6 மணிக்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட இருந்தது. 100க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர்.


பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறிய நிலையில் இறுதிகட்ட ஆய்வுகளை விமான நிலைய ஊழியர்கள் மேற்கொண்டனர். அப்போது விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து, விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.


இது தொடர்பாக விமான ஊழியர்களிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ராஞ்சி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சில பயணிகள் மற்ற விமானங்களில் தங்க வைக்கப்பட்டதாகவும், பலரின் டிக்கெட்டுகள் ரத்து செய்யப் பட்டதாகவும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பயணி சொல்வது என்ன?

இது தொடர்பாக விமானத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த 39 வயதான பயணி அன்வர் கூறியதாவது: நான் குடும்பத்துடன் மாலை 5.20 மணியளவில் விமானத்தில் ஏறி இரவு 7 மணி வரை காத்திருந்தேன்.


திடீரென்று எந்த காரணமும் இல்லாமல் எங்களை இறங்கச் சொன்னார்கள். நாளை டில்லியில் ஒரு முக்கியமான கூட்டத்தில் நான் கலந்து கொள்ள வேண்டும், ஆனால் அவர்கள் விமானம் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்தனர். இதனால் கடும் சிரமம் அடைந்துள்ளேன், என்றார்.

Advertisement