தேசிய பாதுகாப்பு விஷயங்களில் அரசியல் செய்யக் கூடாது; துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்

புதுடில்லி: தேசிய பாதுகாப்பு விஷயங்களில் அரசியல் செய்ய வேண்டாம் என்று துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். பார்லியில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
டில்லியில் துணை ஜனாதிபதி மாளிகையில் நடந்த ராஜ்யசபா இன்டர்ன்ஷிப் திட்டத்தின் 8வது அமர்வின் தொடக்க நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் பேசினார்.
அவர் கூறியதாவது; வளர்ந்து வரும் ஜனநாயகத்தில் தொடர்ச்சியான கசப்பான சூழ்நிலையை நாம் விரும்ப முடியாது. எனக்குத் தெரிந்த வரையில், ஒவ்வொரு அரசியல் கட்சியும், ஒவ்வொரு எம்.பி.,யும் தேசியவாதியாகவே இருக்கிறார்கள். நாட்டின் முன்னேற்றத்தில் நம்பிக்கை கொண்டவர்கள்.
தேசிய பாதுகாப்பு, தேசிய அக்கறை கொண்ட விஷயங்களில் அரசியல் செய்ய வேண்டாம். ஏனெனில் சர்வதேச அரங்கில் இந்தியா பெருமையுடன் நிற்க வேண்டும். உலகில் நாம் நன்கு மதிக்கப்படுகிறோம். இந்தியாவை வெளியிலிருந்து யாராலும் (அதிபர் டிரம்ப்) கட்டுப்படுத்த முடியாது. நாம் ஒரு இறையாண்மை கொண்ட நாடு. நமது அரசியல் செயல்பாடுகளை இந்தியாவுக்கு எதிரான சக்திகள் ஏன் தீர்மானிக்க வேண்டும்? நமது செயல்பாடுகள் நமது எதிரிகளால் ஏன் பாதிக்கப்பட வேண்டும்?, இவ்வாறு அவர் கூறினார்.