இந்திய அணியை துரத்தும் காயம்: ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சந்தேகம்

மான்செஸ்டர்: இந்திய அணியில் காயம் செய்யும் மாயம் தொடர்கிறது. ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் காயத்தால் அவதிப்படுவதால், இளம் வீரர் அன்ஷுல் கம்போஜ் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ('ஆண்டர்சன் - சச்சின் டிராபி') பங்கேற்கிறது. முதல் 3 போட்டி முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் வரும் 23ல் மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் துவங்குகிறது.
இருவர் பாதிப்பு: இப்போட்டிக்கான இந்திய 'லெவன்' அணியை தேர்வு செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. இரண்டாவது டெஸ்டில் 10 விக்கெட் வீழ்த்திய ஆகாஷ் தீப், வெற்றிக்கு கைகொடுத்தார். தற்போது இடுப்பு பகுதி காயத்தால் அவதிப்படுகிறார். மற்றொரு 'வேகப்புயல்' அர்ஷ்தீப் சிங்கிற்கு சமீபத்திய பயிற்சியின் போது இடது கையில் ஏற்பட்டது. இதற்காக 'பேண்டேஜ்' அணிந்துள்ளார். இருவரும் மான்செஸ்டர் போட்டியில் இடம் பெறுவது சந்தேகம். இதையடுத்து ஹரியானாவை சேர்ந்த அன்ஷுல் கம்போஜ் 24, புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார்.
சாதனை வீரர்: டெஸ்ட் தொடருக்கு முன் நடந்த இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய 'ஏ' அணிக்காக 'வேகத்தில்' கம்போஜ் மிரட்டினார். 3 இன்னிங்சில் 5 விக்கெட், ஒரு அரைசதம் (51*) அடித்தார். உள்ளூர் ரஞ்சி தொடரில் 34 விக்கெட் (2024-25 சீசன்) சாய்த்தார். இதில் கேரளா அணிக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தார். பிரிமியர் தொடரில் சென்னை அணிக்காக விளையாடுகிறார்.
பும்ரா நிலை என்ன: கடந்த போட்டிகளில் பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர் சோபிக்காத நிலையில், மான்செஸ்டர் டெஸ்டில் கம்போஜ் அறிமுகமாகலாம். ஆகாஷ் தீப் காயம் காரணமாக பும்ரா 'ரெஸ்ட்' எடுக்க முடியாது. இனி ஆகாஷ் தீப், பும்ரா இணைந்து விளையாட வாய்ப்பு குறைவு. மான்செஸ்டரில் பும்ரா விளையாடினால், ஆகாஷ் 'ரெஸ்ட்' எடுப்பார். அடுத்து ஓவலில் நடக்க உள்ள ஐந்தாவது டெஸ்டில் ஆகாஷ் களமிறங்குவார். பும்ராவுக்கு 'ரெஸ்ட்' கொடுக்கப்படும். கடந்த 3 டெஸ்டிலும் அசராமல் பங்கேற்று 109 ஓவர் (13 விக்கெட்) வீசிய சிராஜ் மட்டும் நம்பிக்கை தருகிறார்.
நிதிஷ் விலகல்: பேட்டிங்கில் சில மாற்றம் செய்யப்படலாம். இடது கை ஆள்காட்டி விரலில் காயம் அடைந்த துணை கேப்டன் ரிஷாப் பன்ட், பேட்டராக மட்டும் செயல்படலாம். 3 டெஸ்டில் 425 ரன் குவித்துள்ளது பலம். கேப்டன் சுப்மன் கில், ரிஷாப் முறையே 4, 5வது இடத்தில் 'செட்டில்' ஆகி விட்டனர். இதனால் கருண் நாயர் 3வது இடத்தில் தொடரலாம். முழங்கால் காயத்தால் அவதிப்படும் நிதிஷ் குமார் ரெட்டி இப்போட்டியில் இருந்து விலகினார். இதனால் விக்கெட்கீப்பராக துருவ் ஜுரலை களமிறக்கலாம்.
இந்திய துணை பயிற்சியாளர் ரியான் டென் டஸ்காட்டே கூறுகையில்,''அர்ஷ்தீப் காயத்தின் தன்மை பற்றி மருத்துவ குழுவினர் ஆய்வு செய்கின்றனர். மான்செஸ்டர் போட்டிக்கு சிறப்பான அணியை தேர்வு செய்வோம்,''என்றார்.
மேலும்
-
பெண்ணிடம் பணம் பறிப்பு முன்னாள் காதலன் கைது
-
கட்டணமின்றி வாகனங்களை நிறுத்தலாம் என அறிவிப்பு
-
அடையாறில் நடந்த படகு போட்டி கொழும்பு கிளப் மகளிர் அணி 'சாம்பியன்'
-
சோழிங்கநல்லுார், துரைப்பாக்கத்தில் சாலையில் திடீர் பள்ளத்தால் பீதி
-
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடத்த கன்டோன்மென்ட் மக்கள் கோரிக்கை
-
கோவிலம்பாக்கம் ரேடியல் சாலையில் நெரிசலை தவிர்க்க போக்குவரத்து மாற்றம்