அதிகாரத்தை வெளிப்படுத்துங்கள்!

கோ.பாண்டியன்,
செங்கல்பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், கோவை
டவுன் ஹால் பகுதியில் பேனர் வைப்பதில், தி.மு.க., - அ.தி.மு.க.,வினருக்கு
இடையே தகராறு ஏற்படவே, சப்--இன்ஸ்பெக்டர் அஜய் சர்மா இருதரப்பினரையும்
சமாதானப்படுத்தி உள்ளார். அச்சமயம் அங்கு வந்த, தி.மு.க., மாவட்ட துணை
செயலர் கோட்டை அப்பாஸ், சப்-இன்ஸ்பெக்டரை பார்த்து, 'நீ என்ன பெரிய
ரவுடியா, தொலைச்சுடுவேன்; உன் யூனிபார்மை கழட்டிடுவேன்' என்று மிரட்டிய
வீடியோ, சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
தி.மு.க., ஆட்சியில் இதுபோன்ற நிகழ்வுகள் சர்வ சாதாரணமாக நடப்பது தான்!
தமிழகத்தில்
காங்கிரஸ் ஆட்சி காலத்தில், அரசியல்வாதிகள் அதிகாரிகளை மிரட்டியதாக, கட்சி
தலைவருக்கு செய்தி கிடைத்தால், உடனடியாக கட்சிக்காரர் மீது ஒழுங்கு
நடவடிக்கை பாயும்.
இந்நிலை,1969ல் கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும்
தலைகீழாக மாறியது. அரசு அதிகாரிகளை, குறிப்பாக காவல் துறையினரை மிரட்டுவது
என்றால், கழக கண்மணிகளுக்கு அல்வா சாப்பிடுவது போல் ஆனது.
இன்று காவல் துறையின் பணிகள் செயல் இழந்து போனதற்கு கருணாநிதியும், அவரது வாரிசுகளுமே காரணம்.
பொதுவாக,
காவல் துறையை தவிர, பிற எந்த அரசு அலுவலர்களையாவது அரசியல்வாதிகள்
மிரட்டினால், அவர்களுக்கு எதிராக அவர்கள் சார்ந்த சங்கங்கள் போராட்டத்தில்
குதிக்கும். அது மாநில அளவிலான போராட்டமாக மாறி, அரசுக்கு தலைவலியாக
மாறும்.
ஆனால், காவல் துறைக்கு அத்தகைய சங்கங்கள் இல்லை.
அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு குரல் கொடுக்க எவரும் இல்லை. இதனாலேயே
கரைவேட்டிகளின் மிரட்டல், அத்துமீறல் அதிகரித்து வருகின்றன.
மேலும், காவல் துறையினர் தங்களுக்கான அதிகாரத்தை பயன்படுத்த தவறியது தான், அரசியல்வாதிகளின் மிரட்டல்களுக்கு காரணம்!
உதாரணத்திற்கு,
கோவை சப்- இன்ஸ்பெக்டரை மிரட்டிய தி.மு.க., பிரமுகர் மீது, முதல் தகவல்
அறிக்கை பதிவு செய்திருந்தால் கூட போதும், தன் மீது வழக்கு பதிவு
செய்யப்பட்டுவிட்டது; நம்மை போலீசார் கைது செய்து விடுவர் என்று ஓடி
ஒளிந்திருப்பார் அல்லது முன் ஜாமின் பெற நீதிமன்றத்தையாவது
நாடியிருப்பார்.
ஆட்சியாளர்களின் தலையீட்டால், அவ்வழக்கு
தற்காலிகமாக கிடப்பில் போடப்பட்டாலும், போலீசாரை மிரட்டிய வழக்கு, தலைக்கு
மேல் தொங்கும் கத்தியாக எப்போதும் உயிர்ப்புடன் இருக்கும்.
ஆட்சி
மாற்றம் ஏற்பட்ட பின், அவ்வழக்கு மீண்டும் உயிர் பெற்று, உரிய நடவடிக்கை
மேற்கொள்ளவோ, சம்பந்தப்பட்ட நபர் களி தின்னவும் வாய்ப்புள்ளது.
அத்துடன்,
ஒரே நபர் மீது திரும்பத் திரும்ப முதல் தகவல் அறிக்கை பதிவு
செய்யப்பட்டால், அவர், ரவுடி லிஸ்டில் சேர்க்கப்படுவார். அவரது பெயர்
காலத்திற்கும் ரவுடி லிஸ்ட்டில் இருக்கும்.
இதன்வாயிலாக, குற்ற
விசாரணைமுறை சட்டப் பிரிவு 107 மற்றும் 110 வாயிலாக, அந்நபர் மீண்டும்
குற்றம் செய்வதை தடுக்கலாம்; மீறினால் கைது செய்து சிறையில் அடைக்கவும்
வழியுண்டு. இதையெல்லாம் செய்ய காவல் துறை தவறிவிடுவதால் தான், இன்று, தடி
எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகி விடுகிறான்!
காவல் துறை அதிகாரம் மிக்கவர்களிடம் முஷ்டியை உயர்த்த முடியாவிட்டாலும், சட்டத்தின் வலிமையை காட்டலாமே!
தெலுங்கானாவை பார்த்து கற்று கொள்ளுங்கள் முதல்வரே!
ப.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், சிவகாசி அருகே சின்னகாமன்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், எட்டு பேர் இறந்தனர்; ஐந்து பேர் படுகாயமடைந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அதேநேரம், தெலுங்கானாவில் சங்கரெட்டி மாவட்டத்தின் பதஞ்சேரு பகுதியில் பாஷ்மிலாராம் என்ற தொழிற்பேட்டையில் இயங்கி வரும் ரசாயன தொழிற்சாலையிலும் விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில், 36 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநில அரசும், சம்பந்தப்பட்ட நிறுவனமும் இணைந்து, விபத்தில் உயிர்இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா, 1 கோடி ரூபாய் அளிக்க முன்வந்துள்ளன.
இரண்டுக்கும் உள்ள வேற்றுமையை பாருங்கள்... இழப்பீடு அரசால் வழங்கப்பட்டாலும், நிறுவனத்தால் வழங்கப்பட்டாலும், வெறும் 4 லட்சம் ரூபாய் என்பது அந்த உயிர்களை அரசு எவ்வளவு மலிவாக எடைபோடுகிறது என்பதையே காட்டுகிறது.
போதை எனும் சுகத்திற்காக, கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் உயிருக்கு, 10 லட்சம் ரூபாயும், ஒரு தொழிலாளியின் உயிருக்கு, 4 லட்சம் ரூபாயும் அரசு மதிப்பீடு செய்கிறது என்றால், இதுபோன்ற சிறந்த ஆட்சியாளர்களை உலகத்தின் எந்த மூலையில் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது.
நல்ல ஆட்சியாளர்கள்; சிறந்த ஆட்சி தான் போங்கள்!
வாக்குறுதி நிலைக்குமா?
என்.வைகை வளவன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'முன்னாள் முதல்வர் கருணாநிதி படுக்கையில் இருந்தபோது அவரை சந்தித்தேன். அவர் ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருக்க என்னை கேட்டுக் கொண்டார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றத்தான் இன்றுவரை தி.மு.க., கூட்டணியில் தொடர்ந்து இயங்கி வருகிறோம்...' என்று கூறியுள்ளார், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ.
அட... அட... என்ன ஒரு விளக்கம்!
கருணாநிதி எப்படி எல்லாம் வைகோவை தரக்குறைவாக விமர்சனம் செய்தார் என்பதை மறந்து விட்டார் போலும்!
இந்த அசகாய சூரர் அரசியலில் முரசொலி மாறனுக்குப் போட்டியாக வளர்ந்து விடக்கூடாது என்பதற்காக, எப்படி எல்லாம் கருணாநிதி இவரை மட்டம் தட்டினார் என்பது நாடறிந்த விஷயம்!
கருணாநிதியின் டார்ச்சரை தாங்க முடியாமல், தி.மு.க.,வை விட்டு வெளியேறி, ம.தி.மு.க., என்ற கட்சியை துவங்கியவர், இன்று கருணாநிதி கேட்டுக் கொண்டதால், ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருக்கிறாராம்...
அதனால் தான், 'வரும் சட்டசபை தேர்தலில் ஸ்டாலினிடம் கூடுதல் இடம் கேட்போம்...' என்று துரை வைகோ கூறியதை கண்டிக்கவில்லையோ!
நல்லவேளை ஆட்சியில் பங்கு கேட்போம் என்று கூறவில்லை.
இப்போது, தி.மு.க., கூட்டணியில் இருக்கும் கம்யூ., தமிழக தலைவர் சண்முகம், வி.சி., தலைவர் திருமாவளவன் ஆகியோர் சட்டசபை தேர்தலில் போட்டியிட அதிக தொகுதிகளைக் கேட்பதுபோல் வைகோவுக்கும் ஆசை வந்து விட்டது போலும்!
கருணாநிதிக்கு அளித்த வாக்குறுதிப்படி, வைகோ, ஸ்டாலினுக்கு கடைசி வரை உறுதுணையாக இருந்தால் சந்தோஷம் தான்!