20 ஆண்டு கோமாவில் இருந்த சவுதி இளவரசர் மரணம்

ரியாத்: கார் விபத்தில் சிக்கி, 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சவுதி அரேபியாவின் இளவரசர் அல்வாலீத் பின் காலித் பின் தலால், 36, நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

மேற்காசிய நாடான சவுதியின் இளவரசர்களில் ஒருவர் காலித் பின் தலால். இவரது மகன் இளவரசர் அல்வாலீத் பின் காலித் பின் தலால். கடந்த 20 ஆண்டுகளாக கோமாவில் படுத்த படுக்கையாக இருந்தார்.

கடந்த 2005ல் அல்வாலீத் லண்டனில் உள்ள ராணுவ கல்லுாரியில் பட்டப்படிப்பில் சேர்ந்தார். அப்போது அங்கு நடந்த கார் விபத்தில் சிக்கி இளவரசர் அல்வாலீத் படுகாயமடைந்தார். அவரது மூளையில் பாதிப்பு ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றார்.

லண்டனில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின் சவுதியின் ரியாத்தில் உள்ள 'கிங் அப்துல் அசிஸ் மெடிக்கல் சிட்டி' மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இங்கு செயற்கை சுவாச கருவிகள் மற்றும் தொடர் மருத்துவ கண்காணிப்பில் கடந்த 20 ஆண்டுகளாக இருந்தார்.

அவ்வப்போது விரல்களை மட்டுமே அசைத்து வந்தார். இதனால் 'உறங்கும் இளவரசர்' என அழைக்கப்பட்டார்.

இந்நிலையில், நீண்ட கால போராட்டத்தை இளவரசர் அல்வாலீத் நேற்று முன்தினம் முடித்துக் கொண்டார். அவரது மறைவுக்கு உலகளாவிய இமாம் கவுன்சில் இரங்கல் தெரிவித்துள்ளது.

Advertisement