பேச்சு, பேட்டி, அறிக்கை

த.மா.கா., பொதுச்செயலர் யுவராஜா பேச்சு:

சட்டசபை தேர்தலை ஒட்டி, அரசு நிர்வாகத்தை அரசியல் நோக்கத்தில், தி.மு.க., பயன்படுத்த துவங்கி விட்டது. நான்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை செய்தி தொடர்பாளர்களாக நியமித்த அரசின் முடிவு கண்டனத்துக்குரியது. துறை சார்ந்த செயல் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நோக்கத்தோடு இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளதாக, அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆனால், அது வெளிப்படையாக, தி.மு.க., தேர்தல் பிரசார முயற்சியின் ஒரு பகுதியாகவே தெரிகிறது.

ஆளுங்கட்சியினர் உறுப்பினர் சேர்க்கை பணியில், 'பிசி'யாக இருப்பதால், அவங்க வேலையை, ஐ.ஏ.எஸ்., களிடம் தந்துட்டாங்களோ?



தமிழக, பா.ஜ., விவசாய அணி தலைவர், ஜி.கே.நாகராஜ் பேட்டி:



கோவையில் நடந்த வேளாண் கண்காட்சியை பார்வையிட்ட, மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், பாராட்டுகளை தெரிவித்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த வேளாண் கண்காட்சியில், சீன தயாரிப்புகளின் ஆதிக்கம் காணப்பட்டது. பிரதமர் மோடியின், 'மேக் இன் இந்தியா' திட்டத்தால், நம் நாட்டில் தயாரித்த இயந்திரங்களின் படைப்பும், உயர் தொழில்நுட்பமும் நிரம்பி கிடந்ததை அங்கு காண முடிந்தது.
'மேக் இன் இந்தியா' திட்டத்தால் கிடைத்த வேலை வாய்ப்புகள் எதிர்க்கட்சியினர் கண்களில் படுவதில்லையே!


அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட, மருது அழகுராஜ் அறிக்கை:


தன் முதல் சுற்று பிரசார பயணத்தை, கோவையில் துவக்கி விழுப்புரம், கடலுாரில் நிறைவு செய்திருக்கும், கவுண்டர் - வன்னியர் கூட்டமைப்பின் பொதுச்செயலர் பழனிசாமி, 2021 சட்டசபை தேர்தல் போலவே, மீண்டும், 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை கையில் எடுத்திருக்கிறார். இதன் வழியே, வன்னியர் சமூகத்தை ஏமாற்றவும், தென் பகுதியில் பரவலாக உள்ள, இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களை அச்சுறுத்தவும் அவர் முயற்சிக்கிறார். ஒரு சமூக நீதி இயக்கத்தை, இரு சமூக கட்சியாக்கி, அ.தி.மு.க., அடிவேரில் வெந்நீரை ஊற்றும் விபரீதத்தை பழனிசாமி செய்கிறார்.
அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியின் பயண திட்டத்தில் கூட, ஜாதிய அடையாளத்தை புகுத்தி, சர்ச்சையை இவர் கிளப்புறாரே!


தமிழக, பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:



'திருவள்ளுவருக்கு காவியடித்து திருட பார்க்கின்றனர்' என, முதல்வர் ஸ்டாலின் பேசி உள்ளார். வள்ளுவரின் வாக்கை பரப்ப நினைப்பதற்கு முன், பின்பற்ற வேண்டிய கடமைகளான கள்ளுண்ணாமை, புறங்கூறாமை, புலால் மறுத்தல் ஆகிய ஒழுக்க நெறிகளை இவரின் ஆட்சியில் செயல்படுத்த எண்ணிஇருந்தால் கூட, திருவள்ளுவர் குறித்து முதல்வர் பேசுவதில் நியாயம் இருந்திருக்கும்.
'புறங்கூறாமல்' அரசியலே நடத்த முடியாதே... இவரது கட்சியினருக்கும் இது பொருந்துமே!

Advertisement