'செல்பி' மோகம் ஒழியுமா?

'நாம் ஒன்று நினைத்தால், நடப்பது வேறு ஒன்றாக இருக்கிறது...' என புலம்புகிறார், கேரள மாநில காங்கிரசின் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா.

இங்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஆட்சியை பிடிக்க, எதிர்க்கட்சியான காங்கிரசின் தலைவர்கள் இப்போதே பிரசாரத்தை துவக்கிஉள்ளனர்.

கம்யூனிஸ்ட் ஆட்சியில் கேரளாவில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து விட்டதாக கூறி, பத்தினம்திட்டா மாவட்டத்தில் பிரமாண்ட பேரணிக்கு, ரமேஷ் சென்னிதலா சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தார். பேரணி துவங்கியதும், கூட்டத்தில் திடீரென சலசலப்பு ஏற்பட்டது.

உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும், சென்னிதலாவுடன், 'செல்பி' எடுப்பதற்காக திரண்டனர். பெரும் கூட்டம் கூடியதால், பேரணி தொடர்ந்து செல்லாமல், ஒரு இடத்திலேயே முடங்கியது. அனைவரும், 'செல்பி' எடுத்து முடித்த பின் தான், பேரணி நகரத் துவங்கியது.

அதற்கு பின், கூட்டம் கரைந்து விட்டது. பேரணியில் ஒரு சிலர் மட்டுமே சென்னிதலாவுடன் சென்றனர். இதனால் கடுப்பான அவர், 'இந்த, 'செல்பி' மோகம் எப்போது ஒழியுமோ...' என, முணுமுணுத்தபடியே நடையை கட்டினார்.

Advertisement