தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை நிபந்தனையில் திடீர் தளர்வு

திருப்பூர்: தி.மு.க.,வில் புதிய உறுப்பினர் சேர்க்கையில், ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு மொபைல் போன் எண் கட்டாயம் என்ற அறிவிப்பை கட்சி தலைமை திரும்ப பெற்றுள்ளதோடு, ஒரு எண்ணுக்கு நான்கு பேர் வரை உறுப்பினராக சேர்க்கலாம் என்று தளர்வு அறிவித்துள்ளது.

வரும் 2016 சட்டசபை தேர்தலுக்காக, அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் உள்ள மொத்த வாக்காளர்களில், 30 சதவீதம் பேரை, கட்சி உறுப்பினராக சேர்க்கும் இலக்குடன், 'ஓரணியில் தமிழகம்' என்ற திட்டத்தை, தி.மு.க., துவங்கி உள்ளது.

கட்சியினர், பூத் வாரியாக சென்று, தி.மு.க.,வில் சேரும் புதிய உறுப்பினர், தன் செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

செயலியில் பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு வரும், ஓ.டி.பி., எனப்படும் ஒரு முறை கடவுச் சொல்லை பதிவு செய்தால் மட்டுமே, புதிய உறுப்பினர் சேர்க்கை உறுதிப்படுத்தப்படும்.

இந்த உறுப்பினர் சேர்க்கை பணி, தினமும் கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

ஒரு செல்போன் எண்ணில் கூடுதல் உறுப்பினரை சேர்த்தால், அந்த பதிவு ஏற்றுக் கொள்ளப்படாமல், மேலிடத்துக்கு கட்சியினர் விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இரு தினங்களுக்கு முன், 15 சதவீதத்துக்கும் குறைவாக உறுப்பினர் சேர்க்கை இருந்த பூத் கமிட்டி நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

அப்போது, வீடு வீடாகச் சென்று, உறுப்பினர் சேர்க்கையில், தனித்தனி செல்போன் எண் பெறுவதில் உள்ள நடைமுறைச்சிக்கல் குறித்து கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, இதில் விலக்கு அளித்து கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ஒரே செல்போன் எண்ணில், நான்கு பேர் வரை உறுப்பினர்களாக சேர்க்கும் வகையில், செயலியில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

மேலும், உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துமாறு தி.மு.க., மாவட்ட செயலர்கள் வாயிலாக அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Advertisement