ஆயிரம் சந்தேகங்கள்: அடுக்குமாடி குடியிருப்பில் பழைய வீடு வாங்குவது லாபமா?

ஒரு பொதுத்துறை வங்கியில் கடந்த 25 ஆண்டுகளாக எனக்கு சேமிப்பு கணக்கு இருக்கிறது. அந்த எண் தான் பான், டீமேட், பங்குகள், கடன் பத்திரங்கள் ஆகிய எல்லா இடங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வங்கி கணக்கை மாற்ற எண்ணுகிறேன். வங்கி கணக்கை மாற்றினால் நான் கொடுத்து வைத்து உள்ள அனைத்து இடங்களிலும் வங்கி எண்ணை நானே மாற்றம் செய்ய வேண்டுமா? அல்லது ஒரு இடத்தில் பதிவு செய்துவிட்டால், அனைத்து இடங்களிலும் தானாக மாற வழி இருக்கிறதா?
சந்துரு, சேலம்
நான் அறிந்த வரையில் இப்படிப்பட்ட ஒருமித்த அப்டேட் வசதி இப்போதைக்கு இல்லை. ஒவ்வொன்றும் வேறுவேறு விதிமுறைகளின் கீழ் வருவதால், தனித்தனியாகத் தான், புதிய வங்கியின் சேமிப்புக் கணக்கு எண்ணை அப்டேட் செய்ய வேண்டும்.
விரைவில் சென்ட்ரல் கே.ஒய்.சி. அல்லது யூனிபார்ம் கே.ஒய்.சி. என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டுவரப் போகிறது.
அதில் ஒருமுறை பதிவு செய்துவிட்டால், அந்த எண்ணையே, வங்கி, காப்பீடு, முதலீடுகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பயன்படுத்தலாம்.
இந்த ஆண்டு புதிய ஒருமித்த கே.ஒய்.சி. கொண்டுவரப்படும் என்று, கடந்த பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் ஒருசில பொதுத்துறை வங்கிகளில் சம்பள கணக்கு மூலம் ஊதியம்
பெறுபவர்களுக்கு விபத்து காப்பீடு, ஆயுள் காப்பீடுமற்றும் சில சலுகைகள் வழங்குவதாக, சம்பந்தப்பட்ட அரசு துறைகள் (அரசு ஆணை எண்:113 (நிதி). நாள்: 14.05.2025) தெரிவித்துள்ளன. இச்சலுகைகள் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களுக்கு பொருந்துமா?
சுக. மதிமாறன், திண்டுக்கல்
பொருந்தாது. அந்த அரசு ஆணையில் அப்படித் தெரிவிக்கப்படவில்லை. தற்போது பணியில் உள்ள தமிழக அரசு ஊழியர்களுக்கு மட்டுமே இந்த ஆணை பொருந்தும்.
நான் சென்னையில் இருந்து கோவைக்கு குடிபெயர்ந்து விட்டேன். சென்னையில் பணியாற்றிய நிறுவனத்தில் பி.எப். பிடித்தம் செய்தார்கள். அதை திரும்ப பெறுவதற்காக கோவை பி.எப். அலுவலகத்தில் கேட்ட போது, சென்னை அலுவலகத்தை தொடர்பு கொள்ள சொல்கிறார்கள். தற்போது சென்னை வரும் சூழல் இல்லை. எப்படி பி.எப். பணத்தைப் பெறுவது?
ஸ்ரீநிதி, கோவை.
உங்களிடம் யு.ஏ.என் எண் இருந்தால் போதும். அந்த எண் உங்கள் மொபைல் எண்ணோடு இணைக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் பொது வருங்கால வைப்பு நிதி அலுவலக வலைத்தளத்துக்குள் பதிவு செய்து நுழையலாம்.
அங்கே பி.எப். பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான படிவங்களும், வழிகாட்டுதல்களும் உள்ளன. அதைப் பின்பற்றுங்கள்.
இந்தியாவில் கடத்தல் தங்கத்தை பெறுபவர்கள் யார்? அவை எப்படி விற்பனை செய்யப்படுகிறது? மத்திய அரசு தங்க கடத்தலை முழுமையாக தடுத்து நிறுத்த முடிவதில்லையே, ஏன்?
எம். திலகவதி, கோவை
தங்கத்தின் மீது மக்களுக்கு அதீத ஆர்வம் இருப்பதால், இதுபோன்ற குறுக்குவழிகளை ஒருசில விஷமிகள் மேற்கொள்கிறார்கள். அது முற்றிலும் வேறோரு உலகம்.
அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியை மத்திய அரசு மேற்கொள்கிறது. நம்மைப் பொறுத்தவரை, ஒரு விஷயம் தான். தனிப்பட்ட நபர்களிடம் நகை வாங்காமல், நல்ல கடைகளில் ஆபரணங்களை வாங்கிச் சேகரிப்பது நல்லது. தங்கத்தின் தரத்தைப் பற்றி கவலையில்லாமல் நிம்மதியாகத் துாங்க முடியும்.
மியூச்சுவல் பண்டு யூனிட்டுகளை அடமானமாக வைத்து கடன் வாங்கலாமா?
ஜி. சாய் சுதாகர், மின்னஞ்சல்
தாராளமாக வாங்கலாம். ஆனால், கடன் தொகை எந்த வகையான மியூச்சுவல் பண்டு யூனிட்டுகள் என்பதைப் பொறுத்து மாறுபடும். பங்குச் சந்தைச் சார்ந்த திட்டங்கள் என்றால், அதன் மொத்த மதிப்பில் 50 சதவீதம் வரை கடன் கிடைக்கும்.
கடன் பத்திரங்கள் சார்ந்த மியூச்சுவல் பண்டுகள் என்றால், அதன் மொத்த மதிப்பில் 80 சதவீதம் வரை கடன் கிடைக்கும். பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் மிக அதிகம் என்பதால், அதற்கு ஈடாக கொடுக்கப்படும் கடன் அளவு குறைவாகவே இருக்கும். இத்தகைய கடன்கள், பர்சனல் லோனை விடச் சற்று குறைவான வட்டியில் கிடைக்கும்.
அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்க திட்டமிட்டுள்ளேன். பழைய வீட்டை வாங்குவது சரியா, புதிதாக கட்டப்படும் வீட்டை வாங்குவது சரியா? எது லாபகரமானது?
கோ. ரகுநாதன்,
வாட்ஸ் ஆப்
உங்கள் கையில் எவ்வளவு பணம் இருக்கிறது, எவ்வளவு துாரம் வங்கிக் கடன் வாங்க முடியும் என்பதைப் பொறுத்து தான் வாங்க முடியும்.
பழையது, புதியது என்பதெல்லாம் உங்கள் மனம், உங்கள் துணைநலத்தின் மனம் ஆகியவற்றைப் பொறுத்தது. புதிய வீடு வாங்குவதே நல்லது என்பது என் கருத்து. கடந்த 30, 40 ஆண்டுகளில் பெரும்பாலான கட்டுமானங்களின் தரம் படிப்படியாக சரிந்து வருகிறது.
நகர சாலைகள் உயர்ந்து, வீடுகள் பள்ளமாகி வருகின்றன. நீங்கள் செகண்டு ஹேண்டாக வாங்கும் வீட்டை, அடுத்த பத்து ஆண்டுகள் கழித்து விற்பனை செய்யப் போனால், அன்றைக்கு அதன் மதிப்பு உயர்ந்திருக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை. இடத்தின் மவுசைப் பொறுத்தே வீட்டின் மதிப்பு உயர்கிறது.
இருப்பினும், உங்களால் இன்னொருவருக்கு லாபகரமாக விற்க முடியாமல் போய்விடலாம். அதனால் அடுக்குமாடி குடியிருப்பை பொறுத்தவரை புதியதே உகந்தது.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com
ph 98410 53881