குப்பை கொட்டுவோரை பிடிக்க 'ஏஐ' கேமரா பொருத்திய மைசூரு
மைசூரு: தடையை மீறி கண்ட இடங்களில் குப்பையை கொட்டுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில், நகரின் பல்வேறு பகுதிகளிலும் 'ஏஐ' கண்காணிப்பு கேமராக்களை, மைசூரு மாநகராட்சி பொருத்தி உள்ளது.
'துாய்மை இந்தியா' திட்டத்தின் பட்டியலில், 2016 மற்றும் 2017ல் முதலிடம் பிடித்த மைசூரு நகரம், அதன்பின் இந்த இடத்தை மீண்டும் பிடிக்க போராடி வருகிறது.
2024 - 25 ஆண்டுக்கான 'சுவச்ச சுவேக் ஷான்' திட்டத்தின் கீழ், மூன்று முதல் 10 லட்சம் மக்கள்தொகை கொண்ட பிரிவில், மைசூரு மூன்றாவது இடம் பிடித்தது.
மீண்டும் முதலிடத்தை பிடிக்க பல்வேறு முயற்சிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், கண்ட இடங்களில் குப்பை கொட்டுபவர்களை கண்காணிக்க, 'ஏஐ' கண்காணிப்பு கேமராக்களை, நகரின் ஒன்பது மண்டலங்களில், 40 இடங்களில் பொருத்தி உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரி டாக்டர் வெங்கடேஷ் கூறிய தாவது:
நகரில் தடையை மீறி குப்பை கொட்டும் 600 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 40 இடங்களில் 'ஏஐ' கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
இந்த கேமராக்களை, மாநகராட்சி பொறியியல் துறையினர் நிர்வகிப்பர். ஏஐ கேமரா மூலம் புகைப்படம் எடுக்கப்படும்.
இத்தகையவர்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
இந்த கேமராவுடன், ஸ்பீக்கரும் பொருத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து எச்சரித்து குப்பை கொட்டும் இடங்கள் உட்பட கேமரா பொருத்தப்பட்ட இடங்களில் சிறுநீர் கழிப்போருக்கு, ஸ்பீக்கர் மூலம் எச்சரிக்கை விடுக்கப்படும். தொடர்ந்து சிறுநீர் கழிப்போர் மீது வழக்கும் பதிவு செய்யப்படும்.
எனவே, எங்களின் திட்டத்துக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.