ராகுலுக்காக சுவர் இடிப்பு போலீசில் பா.ஜ., புகார்

பெங்களூரு : காங்கிரஸ் எம்.பி., ராகுல் போராட்டம் நடத்துவதற்காக, சுதந்திர பூங்காவின் சுவர் இடிக்கப்பட்டதை கண்டித்து, உப்பார்பேட்டை போலீசில், பெங்களூரு மத்திய மாவட்ட பா.ஜ.,வினர் புகார் அளித்துள்ளனர்.

லோக்சபா தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, வரும் 8ம் தேதி பெங்களூரு சுதந்திர பூங்காவில் காங்கிரஸ் போராட்டம் நடத்த உள்ளது. இதில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பங்கேற்கிறார்.

இதற்காக, போராட்டம் நடக்கும் இடத்தில் பந்தல் அமைக்க, தடையாக இருந்த மரங்கள் அகற்றப்பட்டன. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன், ராகுலின் கார், வளாகத்தின் உள்ளே வரும் வகையில், சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு, சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து, பெங்களூரு மத்திய மாவட்ட பா.ஜ., தலைவர் சப்தகிரி கவுடா தலைமையில் கட்சியினர், உப்பார்பேட்டை போலீசில் புகார் அளித்தனர்.

அதில், 'பெங்களூரு சுதந்திர பூங்காவில், வரும் 8ம் தேதி ராகுல் தலைமையில் போராட்டம் நடக்க உள்ளது. இந்த போராட்டத்திற்காக, பல ஆண்டுகளாக அங்கு இருந்த மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அத்துடன் பூங்காவின் சுவற்ரை உடைத்து அரசின் சொத்தை சேதப்படுத்தி உள்ளனர். வாகனம் செல்ல, புதிதாக சாலையும் அமைத்துள்ளனர்.

'மாநிலத்தில் அதிகாரத்தில் இருப்பதால், உரிய அனுமதி இல்லாமல், சுவற்ரை இடித்து, சிமென்ட் சாலை அமைத்தது சட்ட விரோதம். காங்கிரஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement