நவீன விளையாட்டு அரங்கம் அமைக்கப்படுமா?

பெங்களூரு ரூரல் மாவட்டத்தின் தொட்டபல்லாபூர் வளர்ந்து வரும் நகராகும். விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. ஆனால் விளையாட்டு பயிற்சி பெற சரியான அரங்கம் இல்லை என, ஆதங்கப்படுகின்றனர்.

தொட்டபல்லாபூர் நகரின் சோமேஸ்வரா லே - அவுட் அருகில், கர்நாடக அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறைக்கு சொந்தமான பகத் சிங் விளையாட்டு அரங்கம் உள்ளது. இது 6 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். ஆனால் இங்குள்ள மக்கள் தொகைக்கு, ஒரு விளையாட்டு அரங்கம் போதாது. மற்றொரு அரங்கம் வேண்டும் என்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக உள்ளது.

பகத் சிங் விளையாட்டு அரங்கத்தை விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி, பொது மக்களும் பயன்படுத்துகின்றனர். நகரின் முக்கியமான இடத்தில் உள்ள விளையாட்டு அரங்கில், தினமும் அதிகாலை 5:00 மணி முதல் காலை 8:00 மணி வரையிலும், மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும் நுாற்றுக்கணக்கான மக்கள் நடை பயிற்சிக்கு வருகின்றனர். இதே நேரத்தில் விளையாட்டு வீரர்களும் பயிற்சிக்கு வருகின்றனர்.

ஓட்டம், வாலிபால், கிரிக்கெட், கால் பந்து, கோகோ உட்பட பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்சி பெறுகின்றனர்.

விளையாட்டு பயிற்சி பெறுவோர், நடை பயிற்சி செய்வோர் ஒரே அரங்கத்தை பயன்படுத்துகின்றனர். விளையாட்டு பயிற்சி பெற தொந்தரவாக உள்ளது. சரியான பயிற்சி இல்லாததால், விளையாட்டு வீரர்களால் சாதிக்க முடிவதில்லை. விளையாட்டு பயிற்சிக்கு, தனி விளையாட்டு அரங்கம் அமைக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி விளையாட்டு வீரர்கள் கூறியதாவது:

பெண்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு, தொட்டபல்லாபூரின் மிகவும் முக்கியமான இடத்தில், பகத்சிங் விளையாட்டு அரங்கம் அமைக்கப் பட்டுள்ளது.

இங்கு பெண்கள் அதிக எண்ணிக்கையில், நடை பயிற்சிக்கு வருகின்றனர். ஆண்கள் பலவிதமான விளையாட்டு பயிற்சி பெறுவதால், பெண்கள் தர்ம சங்கடத்துக்கு ஆளாகின்றனர். எங்களை போன்ற விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களுக்கும், தொந்தரவாக உள்ளது.

தொட்டபல்லாபூர் விரிவடைந்துள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பாடங்களுடன், கிரிக்கெட், பால் பந்து, கோகோ என பல விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டுள்ளனர்.

இவர்களுக்கு சாதனை செய்யும் திறன் உள்ளது. இவர்களுக்கு போதிய பயிற்சி கிடைத்தால், மாநில, மாவட்ட போட்டிகள் மட்டுமின்றி, தேசிய, சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று சாதிப்பர். இவர்களுக்காக அனைத்து வசதிகளும் கொண்ட, அதிநவீன விளையாட்டு அரங்கம் தேவை.

விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிப்பதாக அரசு கூறுகிறது. ஆனால் தொட்டபல்லாபூரில், மற்றொரு விளையாட்டு அரங்கம் தேவை என, பல ஆண்டுகளாக வேண்டுகோள் விடுத்தும். நிறைவேற்றவில்லை. இனியாவது எங்களின் கோரிக்கைப்படி, விளையாட்டு அரங்கம் அமைத்து தர வேண்டும்.

பகத்சிங் விளையாட்டு அரங்கில், இரவு நேரங்களில் விளையாட்டு பயிற்சி பெறுகிறோம். ஆனால் மின் விளக்குகள் வசதி இல்லை. அதிக வெளிச்சம் கொண்ட மின் விளக்குகள் பொருத்த வேண்டும்.


இவ்வாறு அவர்கள் கூறினர்

- நமது நிருபர் - .

Advertisement