நீச்சலில் சாதிக்கும் மைசூரு சிறுமி

மைசூரு ஜெ.பி., நகரை சேர்ந்த எஸ்.பி., ஷடாக் ஷாரி - ஸ்வேதா தம்பதியின் மகள் தான்யா, 16. பெரும்பாலான சிறுமிகளுக்கு கிரிக்கெட், கால்பந்து போன்றவற்றில் எதிர்காலத்தில் பெரிய வீராங்கனையாக வேண்டும் என ஆசை இருக்கும். ஆனால், தான்யாவுக்கோ நீச்சல் வீராங்கனை ஆக வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. தன் 7 வயதில், விளையாட்டு தனமாக நீச்சல் பயிற்சியில் சேர்ந்தார். மைசூரிலேயே நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

தங்க பதக்கம் அப்போது, மாவட்ட அளவில் நடந்த நீச்சல் பயிற்சியில் கலந்து கொண்டு, வெள்ளி பதக்கம் வாங்கினார். இது, தான்யாவுக்கு நீச்சலின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்தது. இதனால், கடுமையான பயிற்சிகளில் ஈடுபட துவங்கினார். இதையடுத்து, மாவட்ட அளவிலான போட்டிகளில், தங்க பதக்கம் வென்றார்.

பின் பெங்களூரு தெற்கு, கனகபுராவில் உள்ள ஜெ.ஐ.ஆர்.எஸ்., பள்ளியில் சேர்ந்தார். பிறகு, தீவிரமான நீச்சல் பயிற்சிகளில் ஈடுபட துவங்கினார். முழு நேர நீச்சல் வீராங்கனையாக உருமாறினார். மாநில அளவிலான 15 வயதுக்கு உட்பட்டோருக்கான நீச்சல் போட்டியில் பதக்கங்களை பெற்றார். இது இவரின் பெயரை பலருக்கும் அறிய செய்தது. இதை நினைத்து இவரின் பயிற்சியாளர் காகன் உல்லாமத் மனம் பூரித்தார்.

தேசிய அளவு குறிப்பாக, நடப்பாண்டில் பவனகுடியில் நடந்த மாநில ஜூனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் 2025ல், ஐந்து பதக்கங்களை வென்றார். மாநில அளவிலும், தேசிய அளவிலும் சாதனை படைத்தார். இந்த ஆண்டின் இறுதியில் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடக்கும் தேசிய அளவிலான நீச்சல் ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் கர்நாடகா சார்பாக கலந்து கொள்ள உள்ளார்.

இதன் மூலம் தேசிய அளவில் தனது பெயரையும், மாநிலத்தின் பெருமையையும் நிலை நாட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து தான்யா கூறியது:

துவகத்தில் விளையாட்டு தனமாக நீச்சல் பயிற்சியை துவங்கினேன். அப்போது, நினைத்து கூட பார்க்கவில்லை. எதிர்காலத்தில் இவ்வளவு பெரிய நீச்சல் வீராங்கனையாக மாறுவேன் என. நீச்சல் கற்றுக்கொண்டதன் மூலம் என் வாழ்வின் பல மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளன. உணவு பழக்கங்கள் என பல தியாகங்கள் செய்து உள்ளேன். இது நீச்சல் மட்டுமின்றி மற்ற அனைத்து விளையாட்டுகளுக்கும் பொருந்தும்.

உணவு பழக்கம் உணவு பழக்கம், பிட்னஸ் ஆகியவற்றை கடுமையாக கடைப்பிடிக்கிறேன். தற்போது, தங்கும் விடுதியில் சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்படும். எனவே, அசைவ உணவுகளுக்காக ஹோட்டல்களுக்கு சென்று சாப்பிடுகிறேன். அதிகமாக காய்கறி, பழங்கள், தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்து உள்ளேன்.

தினமும் பள்ளி முடிந்ததும் நீச்சல் பயிற்சியில் ஈடுபடுகிறேன். படிப்பு, விளையாட்டு என இரண்டிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்துவது கடினமாக உள்ளது. இருப்பினும், படிப்பு, விளையாட்டு இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறேன்.

ஜப்பானில் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வெல்வதையே இலக்காக வைத்து உள்ளேன். ஒலிம்பிக் போட்டியில் நம் நாட்டிற்காக பங்கேற்று, பதக்கம் பெற வேண்டும் என்பதே கனவு, லட்சியம் எல்லாமே.


இவ்வாறு அவர் கூறினார்

- நமது நிருபர் - .

Advertisement