'சொக்கா... இதுவும் 'திருவிளையாடலா' : 53 ஆண்டுகளாக தடையின்மை சான்று இல்லை: மீனாட்சி அம்மன் கோயில் தங்கும் விடுதியில்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கும் பிர்லா விஸ்ரம் கட்டடத்திற்கு தீயணைப்பு துறையின் தடையின்மை சான்று இன்னும் பெறப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இக்கோயிலில் 2018 பிப்.2ல் வீரவசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மண்டபம் முற்றிலும் சிதைந்தது. இன்னும் சீரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. பழமையான கட்டுமானம், பாதுகாப்பற்ற சூழல் போன்ற காரணங்களால் வீரவசந்தராயர் மண்டபத்தில் இருந்த கடைக்காரர்களுக்கு மாற்று இடம் கொடுக்கப்பட்டது. அதேசமயம் கோயிலைச் சுற்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் பழமையானவை, பாதுகாப்பற்றவை என கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு கட்டட உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் கொடுத்தது.

இந்நிலையில் மேலசித்திரை வீதியில், கோயிலின் நிர்வாகத்தில் உள்ள பக்தர்கள் தங்கும் 'பிர்லா மந்திர்' விடுதிக்கு இதுவரை தீயணைப்புத்துறையின் தடையின்மை சான்று பெறப்படவில்லை. இக்கட்டடம் அமைந்துள்ள அன்னக்குழி மண்டபம். சிவபெருமானின் திருவிளையாடலோடு தொடர்பு உடையது. மீனாட்சி திருக்கல்யாணத்தின்போது பக்தர்களுக்கு இம்மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இம்மண்டபத்தை இடித்துவிட்டு கோயில் நிர்வாகம் 1972 அக்.8 ல் பிர்லா விஸ்ரம் என்ற பெயரில் பக்தர்கள் தங்கும் விடுதி திறக்கப்பட்டது.

ஆலயம் காப்போம் ஒருங்கிணைப்பாளர் தினகரன் கூறியதாவது: 53 ஆண்டுகளாகியும் இந்த விடுதிக்கு இதுவரை தீயணைப்பு- துறையின் தடையின்மை சான்று பெறவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின்மூலம் தெரியவந்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும்பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் எந்த பாதுகாப்பும் இல்லை என்பது கோயில் நிர்வாகத்தின் மெத்தன போக்கையே காட்டுகிறது. இதேபோல் கோயிலுக்குள் அன்னதான கூடம், புதுமண்டபம் எதிரேயுள்ள எழுகடல் தெரு வணிக வளாகம் போன்றவற்றுக்கும் தீயணைப்பு- துறையின் தடையின்மை சான்று பெறவில்லை. பக்தர்களின் நலன்கருதி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கோயில் நிர்வாகம் எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Advertisement