ஆட்சியின் கடைசி ஆண்டில் குறளி வித்தை காட்டும் திமுக அரசு; அண்ணாமலை விளாசல்

1

சென்னை; ஆட்சியின் கடைசி ஆண்டில் குறளி வித்தை காட்டிக் கொண்டிருக்கிறது திமுக அரசு என்று தமிழக பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.



இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;


கடந்த நான்கு ஆண்டுகளாக விளம்பர நாடகமாடிக் கொண்டிருந்து விட்டு, ஆட்சியின் கடைசி ஆண்டில் குறளி வித்தை காட்டிக் கொண்டிருக்கிறது திமுக அரசு.


தேசியக் கல்விக் கொள்கை 2020 வெளியாகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. அவற்றின் முக்கியத்துவத்தை இப்போதுதான் திமுக அரசு உணர்ந்திருக்கிறது.


கல்விக் கொள்கை வடிவமைப்பில், திமுக அரசு ஐந்து ஆண்டுகள் பின்தங்கி இருக்கிறது என்பதை இனியாவது முதல்வர் ஸ்டாலின் உணர வேண்டும். உங்கள் அரசியலுக்காக தமிழகப் பள்ளி மாணவர்கள் கல்வியில் விளையாடுவதை, இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்.


இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


இதோடு, அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் கூறி உள்ளதாவது;


திமுக ஆட்சியின் மிக முக்கிய நாடகங்களில் ஒன்று, பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி. ஆசிரியப் பெருமக்களுக்கான ஊதியம் வழங்க வேண்டிய நிதியை விட சிறிது அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்து விட்டு, பாருங்கள், பள்ளிக் கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கியுள்ளோம் என்று பெருமை பேசிக் கொள்வார்கள். ஆனால், பள்ளிகளின் உட்கட்டமைப்புக்கான நிதி ஒதுக்கீடு செய்ய மாட்டார்கள்.


இதன் விளைவுதான், தமிழகம் முழுவதும், அரசுப் பள்ளிகள் கட்டிடங்கள் இல்லாமல், மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து பாடம் படிப்பதும், திமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுவதும் தினசரிச் செய்தி ஆகியிருக்கின்றன.


ஆனால், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறோம், கணினி ஆய்வகங்கள் மேம்படுத்த ரூ.160 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறோம் என்று வெற்று அறிவிப்புகளை மீண்டும் வெளியிட்டுள்ளார்கள். அப்படி எத்தனை பள்ளிக் கட்டிடங்கள் எந்தெந்த மாவட்டங்களில் கட்டியிருக்கிறீர்கள் என்றும், கணினி ஆய்வகங்கள் அமைக்க மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிதி என்ன ஆனது என்றும், ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்தோம். அதற்கு இன்று வரை பதில் இல்லை.


பள்ளிக் கல்வி தொடர்பான மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், தமிழகம் பல்வேறு பிரிவுகளில் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. இவற்றை எல்லாம் எப்படி சரி செய்யப் போகிறார்கள் என்ற படிநிலைகள் குறித்த எந்த அறிவிப்பும் இல்லாமல், பெயருக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டு, பொதுமக்களை ஏமாற்ற முயற்சித்து இருக்கிறார்கள்.


இந்திய அளவில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையின்படி, தமிழகம் பத்தாவது இடத்தில் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், தமிழகத்தில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என, சமீபத்தில் வெளியான மத்திய அரசின் அறிக்கை தெரிவிக்கிறது.


ஆனால், திமுக அரசு வெளியிட்டுள்ள மாநிலக் கல்விக் கொள்கையில், அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவது குறித்த சிறப்புத் திட்டங்கள் ஒன்றும் இல்லை. வேறு எதற்காக இந்தக் கல்விக் கொள்கை என்ற வெற்று அறிவிப்பு?


கடந்த நான்கு ஆண்டுகளாக விளம்பர நாடகமாடிக் கொண்டிருந்து விட்டு, ஆட்சியின் கடைசி ஆண்டில் குறளி வித்தை காட்டிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. தேசியக் கல்விக் கொள்கை 2020 வெளியாகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. அவற்றின் முக்கியத்துவத்தை இப்போதுதான் திமுக அரசு உணர்ந்திருக்கிறது.


கல்விக் கொள்கை வடிவமைப்பில், திமுக அரசு ஐந்து ஆண்டுகள் பின்தங்கி இருக்கிறது என்பதை இனியாவது முதல்வர் ஸ்டாலின் உணர வேண்டும். உங்கள் அரசியலுக்காக தமிழகப் பள்ளி மாணவர்கள் கல்வியில் விளையாடுவதை, இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்.


இவ்வாறு அண்ணாமலை கூறி உள்ளார்.

Advertisement