வெளி மாவட்ட போலீசாரை பணியில் ஈடுபடுத்த வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி

மதுரை: கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளிமாவட்ட போலீசாரை நியமிக்கும் அரசாணையை நடைமுறைப்படுத்த தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

களியக்காவிளை அசோக்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு: கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டில் முன்பு கலவரம் ஏற்பட்டது. அதற்கு பிறகு தேங்காய்பட்டணத்தில் 1998ல் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி முருகேசன் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. அக்கமிஷன்,'கன்னியாகுமரி மாவட்டத்தில் பணிபுரியும் பெரும்பாலான போலீசார் அதே மாவட்டத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். தனிப்பட்ட காரணங்களுக்காக பழிவாங்கும் நோக்கம் மற்றும் சார்புத் தன்மையுடன் செயல்படுகின்றனர். காவல்துறையின் கண்ணியத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது. வேறு மாவட்டங்களைச் சேர்ந்த போலீசாரை கன்னியாகுமரி மாவட்டத்தில் நியமிக்க வேண்டும்,' என தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. இதை ஏற்று அரசு 2000 ல் அரசாணை வெளியிட்டது. அதை நிறைவேற்றவில்லை. புகார் கொடுக்கும் அப்பாவிகள் பாதிக்கப்படுகின்றனர். போலீசார் பாரபட்சமாக செயல்படுவது தொடர்கிறது. வெளிமாவட்ட போலீசாரை கன்னியாகுமரி மாவட்டத்தில் நியமிக்கும் அரசாணையை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.

அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார்: இக்கொள்கையானது இன்ஸ்பெக்டர் மற்றும் அதற்கு மேல் பதவியில் உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு மட்டுமே பொருந்தும். கீழ்நிலை போலீஸ் அதிகாரிகளை பொறுத்தவரை, அவர்கள் தங்கள் மாவட்டத்திற்குள் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். சில சந்தர்ப்பங்களில் நிர்வாக காரணங்களுக்காக பிற மாவட்டங்களுக்கு மாற்றப்படுகிறார்கள் என்றார்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இடமாற்றம், பணி நியமனம் காவல்துறையின் நிர்வாக ரீதியான உரிமையாகும். நீதித்துறையின் மறுஆய்வு அதிகாரத்தை பயன்படுத்தி, நிர்வாகத்தை நடத்தவோ அல்லது ஊழியர்களை இடமாற்றம் செய்யவோ இந்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது. மனு நிலைநிற்கத்தக்கதல்ல. தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.

Advertisement