அழகர்கோவில் ஆடித்தேரோட்டம் கோலாகலம்: பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி, அசைந்து வந்த தேர்

அழகர்கோவில்: மதுரை மாவட்டம் அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடி மாத பிரம்மோற்ஸவத்தின் 9ம் நாளான நேற்று, தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. 'நாராயணா', 'கோவிந்தா' கோஷங்கள் விண்ணை முட்ட பக்தர்கள் வெள்ளத்தில் தேர் ஆடி, அசைந்து வந்தது.
108 வைணவத் தலங்களில் ஒன்றான கள்ளழகர் கோயிலில் இந்தாண்டிற்கான ஆடிப் பெருந்திருவிழா ஆக., 1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில், தினமும் காலையில் தங்கப் பல்லக்கிலும், இரவில் அன்னம், சிம்மம், அனுமார், கருடன், சேஷன், யானை, குதிரை வாகனங்களிலும் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார்.
விழாவின் முக்கிய தினமான நேற்று தேரோட்டத்தை முன்னிட்டு காலை 6:30 மணியளவில் சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார்.
காலை 8:45 மணிக்கு கலெக்டர் பிரவீன் குமார், மேலுார் ஆர்.டி.ஓ., சங்கீதாமுன்னிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விண்ணதிர 'நாராயணா', 'கோவிந்தா' கோஷங்களிட்டு மேளதாளங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த தேர், மதியம் 1:00மணிக்கு நிலைக்கு வந்தது.
திருவிழாவை முன்னிட்டு இருநாட்களுக்கு முன்பே அண்டை மாவட்டங்கள், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மக்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டிகளில் வந்து கோயில் வளாகத்திலேயே தங்கினர்.
பதினெட்டாம்படி கருப்பண சுவாமிக்கு பால்குடம், சந்தனக்குடம், கிடா வெட்டு உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை நேற்று பரவசத்துடன் செலுத்தினர். பொங்கல் வைத்து அன்னதானமும் வழங்கினர்.
எஸ்.பி., அரவிந்த் தலைமையில் 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் உயர்கோபுரம் அமைத்து சி.சி.டி.வி.,க்கள்மூலம் போலீசார் கண்காணித்து வந்தனர். கூட்ட நேரிசலை கட்டுப்படுத்த நுழைவு வாயிலுக்கு 2 கி.மீ. முன்பாகவே வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு பக்தர்கள் மட்டும் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். அசம்பாவிதங்களை தவிர்க்க மருத்துவகுழுக்களுடன் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
கோயில் நிர்வாகத்துடன் அ.வலையபட்டி ஊராட்சி இணைந்து குடிநீர், தற்காலிக கழிப்பறை, குளியலறை, பார்க்கிங் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
மாலையில் சுந்தரராஜ பெருமாள் புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளினார். இன்று தீர்த்தவாரி நடக்கிறது. நாளை உற்ஸவ சாந்தியுடன் பிரம்மோற்ஸவ விழா நிறைவடைகிறது. நேற்று மாலை 6:30 மணிக்கு மேல் ஆடிப் பவுர்ணமியை முன்னிட்டு பதினெட்டாம்படி கருப்பண சுவாமி சன்னதி கதவுகள் திறக்கப்பட்டன.
18 படிகளையும் மலர் மாலைகளால் அலங்கரித்து, மெகா சூடம் ஏற்றப்பட்டு படிபூஜை நடந்தது. பின் கதவுகளுக்கு சந்தனம் சாத்தப்பட்டு நிலை மாலைகள், தோரணங்களால் அலங்கரித்து தீபாராதனைகாட்டப்பட்டது.ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும் இக்கதவுகள் நேற்று திறக்கப்பட்டதால் பக்தர்கள் பரவசத்துடன் தரிசித்துச் சென்றனர்.
ஏற்பாடுகளை கோயில் துணை கமிஷனர் யக்ஞ நாராயணன், அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடாசலம், கண்காணிப்பாளர் பாலமுருகன் உட்பட அறங்காவலர்கள் செய்திருந்தனர்.
மேலும்
-
தனி நபருக்காக சட்டத்தை திருத்தும் தமிழக அரசு: ஓய்வு பெற்ற அதிகாரிக்கு ஓயாத சலுகை!
-
இயற்கையுடன் இயைந்து மகிழ்ச்சியாக வாழ்கிறோம்!
-
அமைதியானதா அமலாக்கத்துறை?
-
மீண்டும் இருளில் மூழ்கும் உ.பி., கிராமங்கள்; மின்துறை அமைச்சரால் முதல்வர் யோகிக்கு சிக்கல்
-
கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 80 பேர் பலி
-
ரஷ்ய துணை பிரதமருடன் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு