மகளிர் உதவி திட்டத்தில் 26 லட்சம் போலி பயனாளிகள்
மும்பை:மஹாராஷ்டிராவில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் உதவித் தொகை திட்டத்தில் 26 லட்சம் தகுதியற்ற பயனாளிகள் இருப்பதாக தெரியவந்ததால், விரிவான சீராய்வுக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, 21 முதல் 65 வயது வரை உள்ள பெண்களுக்கு மாதந்தோறும், 1,500 ரூபாய் வழங்கும் மகளிர் உதவித் தொகை திட்டம் கொண்டு வரப்பட்டது.
தேர்தலை சந்திக்கும் நோக்கில், அவசர கதியில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டதால், திட்ட பயனாளிகள் குறித்த விபரங்கள் முறையாக ஆய்வு செய்யப்படவில்லை. தற்போது இத்திட்டத்தால் அரசுக்கு பெரும் நிதி சுமை ஏற்பட்ட நிலையில், மொத்தம் உள்ள 2 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளில், 26 லட்சம் பேர் முறைகேடாக நிதி உதவி பெற்று வருவது தெரியவந்தது.
தவிர, 14,298 ஆண்களும் முறைகேடாக இத்திட்டத்தின் கீழ் பயன் பெற்று வந்த தகவலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த திட்டத்தின் கீழ் 21 முதல் 65 வயது வரை உள்ள மகளிர் மட்டுமே, மாதந்தோறும், 1,500 ரூபாய் நிதி உதவி பெற முடியும். மேலும், ஒரே குடும்பத்தில் இரு பெண்கள் மட்டுமே, இந்த நிதியுதவி பெற முடியும்.
ஆனால், விதிகளை மீறி, 65 வயதுக்கு மேற்பட்டவர்களும், ஒரே வீட்டில் இரண்டுக்கும் மேற்பட்ட பெண்களும், நிதியுதவி பெற்று வந்ததாக கூறி, அதிகாரிகள் அதிர்ச்சியளித்தனர்.
இதையடுத்து வீடு, வீடாக சென்று பயனாளிகளை சரிபார்க்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்காக அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் அங்கன்வாடி ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி பயனாளர்களின் வயது, ஒரே குடும்பத்தில் எத்தனை பேருக்கு நிதியுதவி செல்கிறது என்ற விபரங்களை அவர்கள் சேகரிக்கவுள்ளனர் என, அரசுத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும்
-
தனி நபருக்காக சட்டத்தை திருத்தும் தமிழக அரசு: ஓய்வு பெற்ற அதிகாரிக்கு ஓயாத சலுகை!
-
இயற்கையுடன் இயைந்து மகிழ்ச்சியாக வாழ்கிறோம்!
-
அமைதியானதா அமலாக்கத்துறை?
-
மீண்டும் இருளில் மூழ்கும் உ.பி., கிராமங்கள்; மின்துறை அமைச்சரால் முதல்வர் யோகிக்கு சிக்கல்
-
கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 80 பேர் பலி
-
ரஷ்ய துணை பிரதமருடன் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு