தலைவர், துணைத்தலைவர் 'ஈகோ'வால் முடங்கிய நிர்வாகம்; கெங்குவார்பட்டி பேரூராட்சியில் மூன்று ஆண்டில் 10 செயல் அலுவலர்கள் மாற்றம்

தேவதானப்பட்டி; கெங்குவார்பட்டி பேரூராட்சியில் தலைவர், துணைத்தலைவர் இடையே நிலவும் மோதல் போக்கு 'ஈகோ'வால் 10 மாதங்களாக கூட்டம் நடைபெறாமல் நிர்வாகம் முடங்கியுள்ளது. மூன்று ஆண்டுகளில் 10 செயல் அலுவலர்கள் மாறி சென்ற அவலம் நீடிக்கிறது.
பெரியகுளம் தாலுகா, கெங்குவார்பட்டி பேரூராட்சி செங்குத்துப்பட்டியில் துவங்கி பாலப்பட்டி வரை 5 கி.மீ., தூரம் உள்ளது.
இப் பேரூராட்சியில் கெங்குவார்பட்டி, ராமர் கோயில் தெரு, செங்குளத்துப்பட்டி, கோட்டார்பட்டி, அம்சாபுரம், கொடைக்கானல் அடிவாரம் மெயின்ரோடு, மீனாட்சிபுரம், உடையப்பா தெரு, பஜனைமடம் தெரு, கம்பெனி ரோடு, ஸ்ரீராம் நகர், பகவதி நகர் உட்பட 20 க்கும் அதிகமான முக்கிய தெருக்கள் உட்பட 15 வார்டுகள்உள்ளன. இங்கு 12,800 அதிக மக்கள் வசிக்கின்றனர்.
கெங்குவார்பட்டிக்கு மஞ்சளாறு அணையின் கீழ் பகுதியில் நாகர்வலை என்ற இடத்தில் ஆழ்துளை கிணற்றில் இருந்து பம்பிங் செய்து, பேரூராட்சி பகுதியில்உள்ள 11 மேல்நிலை தொட்டிகள் மூலம் தினமும் 10 லட்சம் லிட்டர் குடிநீர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் விநியோகம் செய்யப்பட்டது.
கடந்த ஒரு ஆண்டாக பேரூராட்சியில் நிலவும் கோஷ்டி பிரச்னையால் நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. இதனால் குடிநீர் வினியோகிக்கும் நாகர்வலை பகுதியில் அடிக்கடி மின்மோட்டார் பழுதாவது, பியூஸ் போவது, குடிநீர் பம்பிங் செய்வதில் சிக்கல், பழுதடைந்த குழாய்கள் பராமரிப்பு செய்யாததால் பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யும் நிலை ஏற்பட்டு செயற்கையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
10மாதமாக கூட்டம் நடைபெறவில்லை கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி (தி.மு.க.,), துணைத்தலைவராக ஞானமணி (தி.மு.க.,) இருவருக்கும் இடையே சுமூக நிலை இருந்த நிலையில் ஞானமணியின் மகன் தி.மு.க., மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஸ்டீபன், தமிழ்ச்செல்வியின் கணவர் அரசு பள்ளி ஆசிரியர் சவுந்திரபாண்டி ஆகியோர் பேரூராட்சி நிர்வாத்தில் தலையீட்டால், டெண்டர் விடுவது, கான்ட்ராக்டர் தேர்வில் இவர்களுக்குள் இடையே நிலவிய முரண்பாடு மோதலானது.
'10 செயல் அலுவலர்கள் மாற்றம்' தலைவர், துணைத்தலைவர் இடையே நிலவும் 'ஈகோ', மோதல் போக்கால் இதுவரை 10 செயல் அலுவலர்கள் பணி மாறுதலாகி 'ஆளை விடுங்கள்' என்ற மனநிலையில் மாறுதலாகி சென்றுள்ளனர். கம்பம் புதுப்பட்டி செயல் அலுவலர் இளங்கோவன், கெங்குவார்பட்டி கூடுதல் பொறுப்பாக கவனிக்கிறார். சுமார் 80 கி.மீ., தொலையில் இருந்து செயல் அலுவலர் வரவேண்டியுள்ளதால் இவர் பெரும்பாலான நாட்களில் கெங்குவார்பட்டிக்கு வருவதில்லை.
இதனால் கெங்குவார்பட்டி பேரூராட்சி கூட்டம் 10 மாதங்களாக நடக்கவில்லை. இதனால் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் நிர்வாகம் முடங்கியுள்ளது.
சாக்கடை வசதி இல்லை பாலமுருகன் கெங்குவார்பட்டி: 12 வது வார்டு கம்பெனி தெருவில் சாக்கடை வசதி இல்லாததால், பொதுமக்கள் வீட்டின் எதிரில் குழி தோண்டி கழிவுநீரை விடுகின்றனர். குழி தோண்டினால் அருகில் உள்ள இடத்துக்காரர்கள் பிரச்னை செய்கின்றனர்.
இதே நிலை அனைத்துப் பகுதிகளிலும் உள்ளது. ரோடு, குடிநீர் வசதிகள் செய்து தரப்படாத தால் மக்கள் பேரூராட்சி நிர்வாகம் மீது அதிருப்தியில் உள்ளனர்.
தலைவர், துணைத்தலைவர் 'ஈகோவை' கைவிட்டு, ஓட்டுபோட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
கொசுக்கடியால் அவதி சிவனம்மாள் கெங்குவார்பட்டி: சாக்கடை வசதி இல்லை, குப்பை அள்ளுவது இல்லை. இதனால் ஊர்முழுக்க சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் கொசுக்கடியால் அவதிப்படுகிறோம்.
பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்வதால் உவர்ப்பு நீரை பருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
வீட்டு வரி, குழாய் வரி செலுத்தும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதராததால் பொதுமக்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
முடங்கிய திட்டங்கள் சட்டசபையில் கெங்குவார்பட்டி பேரூராட்சி சுடுகாட்டில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்க ரூ.1.67 கோடி மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்டது. தலைவர், துணைத்தலைவர் ஈகோவால் இடம் தேர்வு செய்வதில் குளறுபடி காரணமாக திட்டம் செயல்படுத்த முடியாமல் முடங்கியுள்ளது. இதேபோல் கெங்குவார்பட்டி பட்டிமந்தை பகுதியில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் ரோடு போடும் பணி, தலைவர், துணைத்தலைவர் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் நிறுத்தப்பட்டுள்ளது. செயல் அலுவலர் இளங்கோவன் கூறுகையில், 'அடிப்படை வசதிகளை நிறைவேற்ற 24 பணிகள் தேர்வு செய்துள்ளேன் என கூறியவர் பிரச்னைக்கு உரிய திட்டங்கள் பற்றி கேட்ட போது பதில் அளிக்க மறுத்தார்.
மேலும்
-
மியான்மரில் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 21 பேர் பலி
-
'வாக்காளர் உரிமை யாத்திரை' பீஹாரில் இன்று ராகுல் துவக்கம்
-
போராட்டத்தில் கோஷ்டி கானம்; பயந்து பின்வாங்கியது காங்கிரஸ்
-
தண்ணீரை சேமிக்க இ - மெயிலில் பழைய செய்திகளை நீக்க உத்தரவு
-
பரபரப்பான டில்லி தேர்தலில் பா.ஜ.வுக்கு ஏற்பட்ட பின்னடைவு
-
பெருவெள்ளத்தில் நம் வாகனங்களை காக்கும் சிறுதுளி பிரீமியம்!