டில்லியில் தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்; 20 பேர் மீது போலீசார் வழக்கு

14


புதுடில்லி: ரோஹினியில் தெருநாய் பிடிக்கும் நடவடிக்கையின் போது மாநகராட்சி ஊழியர்களைத் தாக்கிய, நாய் பிரியர்கள் 20 பேர் கொண்ட குழு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


ரேபிஸ் பாதிப்புக்கு வழிவகுக்கும் தெருநாய் கடி குறித்து தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம், தெருநாய்களுக்கு கருத்தடை ஊசி போட்டு, நிரந்தரமாக நாய் காப்பகங்களுக்கு மாற்ற உத்தரவிட்டிருந்தது. தெரு நாய்களுக்கு எதிராக இந்த உத்தரவு இருப்பதாகக் கூறி விலங்கு ஆர்வலர்கள் டில்லி உள்பட பல முக்கிய நகரங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டில்லியில் உள்ள ரோஹினியில் தெருநாய் பிடிக்கும் நடவடிக்கையின் போது மாநகராட்சி ஊழியர்களைத் தாக்கிய, விலங்கு ஆர்வலரும், நாய் பிரியருமான 20 பேர் கொண்ட குழு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இது குறித்து ரோஹினி துணை போலீஸ் கமிஷனர் ராஜீவ் ரஞ்சன் கூறியதாவது:நாய் பிரியர்கள் தெரு நாய் பிடிக்கும் பணியில் ஈடுபட்ட டில்லி மாநகராட்சி ஊழியர்களின் வாகனத்தைத் தடுத்ததாகவும், இரண்டு தெருநாய்களை விடுவித்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் மாநகராட்சி ஊழியர்களை தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் வாகனத்தின் ஜன்னலை உடைத்து, பதிவேடு திருடியது உள்ளிட்ட நாசவேலைகள் நடந்தன.

ஒரு அரசு ஊழியர் தங்கள் கடமையைச் செய்யவிடாமல் தடுத்ததற்கும், அவர்களின் பொருட்களை திருடியதற்கும் பல்வேறு பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement