சதியால் சிக்கிய பேராசிரியர் போக்சோ வழக்கில் விடுதலை

14

மூணாறு: தேர்வெழுதிய மாணவியருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், பேராசிரியருக்கு எதிராக சதி செய்தது கண்டறியப்பட்டு, அவரை கோர்ட் விடுவித்தது.


கேரள மாநிலம், மூணாறு, சொக்கநாடு எஸ்டேட், சவுத் டிவிஷனை சேர்ந்தவர் ஆனந்த் விஸ்வநாதன். மூணாறு அரசு கல்லுாரி பொருளாதார துறை தலைவராக இருந்தார். கல்லுாரியில், 2014 ஆக., முதல் செப்., 5 வரை எம்.ஏ., பொருளாதாரம், இரண்டாம் செமஸ்டர் தேர்வு நடந்தது.




அப்போது தேர்வு எழுதிய ஐந்து மாணவியரை, ஆனந்த் விஸ்வநாதன் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கல்வித்துறை அமைச்சர், மகளிர் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. மூணாறு போலீசார் விசாரித்து, ஆனந்த்விஸ்வநாதன் மீது நான்கு வழக்குகள் பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

தேவிகுளம் செஷன்ஸ் கோர்ட்டில், இரு வழக்குகளில் ஆனந்த் விஸ்வநாதனை விடுவித்த நீதிமன்றம், இரண்டு வழக்குகளில், மூன்று ஆண்டுகள் தண்டனை விதித்தது. ஆனந்த் விஸ்வநாதன் பணியில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். தேவிகுளம் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஆனந்த் விஸ்வநாதன், தொடுபுழா கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.




மாணவியர் புகார் குறித்து பல்கலை விசாரணை ஆணையம் நடத்திய விசாரணையில், மா.கம்யூ., கட்சியின் மாணவர் அமைப்பை சேர்ந்த மாணவியர், தேர்வில் காப்பி அடித்ததை பேராசிரியர் கண்டுபிடித்ததால், அவர் மீது பொய் புகார் அளிக்கப்பட்டதும், அதற்கான ஆலோசனை மூணாறில் மா.கம்யூ., அலுவலகத்தில் நடந்ததும் தெரிந்தது.



வழக்கை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் கோர்ட், அரசியல் சதி மூலம் தொடரப்பட்ட வழக்கு என, போலீசாருக்கு எதிராக கடுமையாக விமர்சித்ததுடன், ஆனந்த்விஸ்வநாதனை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது.

Advertisement