தொழிலதிபரை கடத்தி ரூ.20 லட்சம் கேட்ட ரவுடிகள் உட்பட 6 பேர் கைது

பெங்களூரு : தொழிலதிபரை கடத்தி, 20 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய, இரண்டு ரவுடிகள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு, ராஜாஜி நகர் மோடி மருத்துவமனை சதுக்கம் பகுதியில் வசிப்பவர் மனோஜ்குமார், 25; ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவருக்கு, ரவுடியான ராஜேஷ் என்பவருடன் பழக்கம் இருந்தது.

ராஜேஷ் கூறியதால், கன்னட திரைப்பட இயக்குநர் ஒருவருக்கு 1.20 லட்சம் ரூபாயை கடனாக, மனோஜ்குமார் கொடுத்தார். ஆனால் திரைப்பட இயக்குநர் பணத்தை திரும்ப தரவில்லை. பணத்தை வாங்கித் தரும்படி ராஜேஷுக்கு, மனோஜ்குமார் அழுத்தம் கொடுத்தார்.

கடந்த மாதம் 26ம் தேதி மனோஜ்குமாரிடம் மொபைல் போனில் பேசிய ராஜேஷ், பணம் தருவதாக கூறினார். மோடி மருத்துவமனை அருகே காத்திருந்த மனோஜ்குமாரை, தன் கூட்டாளிகளான ரவுடி பாம்பே சீனா, நவீன், சோமய்யா, யுகேஷ் ஆகியோருடன் சேர்ந்து ராஜேஷ் காரில் கடத்திச் சென்றார்.

நகரின் பல இடங்களை காரில் சுற்றினர். மனோஜ்குமாரின் இரண்டு மொபைல் போனில் இருந்து, 3 லட்சம் ரூபாயை தங்கள் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றினர். 'மேலும் 20 லட்சம் ரூபாய் கொடுத்தால், உயிருடன் விடுவோம்' என, மனோஜ் குமாரிடம் கூறினர்.

பணம் கொடுப்பதாக மனோஜ்குமார் ஒப்புக் கொண்டதால், ஞானபாரதி மெட்ரோ ரயில் நிலையம் அருகில் இறங்கிவிட்டு தப்பினர்.

மனோஜ்குமார் அளித்த புகாரில், ஞானபாரதி போலீசார் விசாரித்தனர். மனோஜ்குமாரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய, இரண்டு ரவுடிகள் உட்பட ஆறு பேரை சி.சி.பி., போலீசார், நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

Advertisement