அமித் மிஷ்ரா ஓய்வு: 25 ஆண்டு நீண்ட பயணம்

புதுடில்லி: கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார் அமித் மிஷ்ரா.
இந்திய அணியின் சீனியர் 'லெக் ஸ்பின்னர்' அமித் மிஷ்ரா, 42. டில்லியில் பிறந்த இவர், 2000ல் ஹரியானா அணிக்காக முதல் தர போட்டியில் விளையாடினார். 2003ல் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் (எதிர், தெ.ஆ.,) அறிமுகமானார். அப்போது கும்ளே, ஹர்பஜன் ஆதிக்கம் செலுத்த, 5 ஆண்டுகள் புறக்கணிக்கப்பட்டார்.
அசத்தல் அறிமுகம்: பின் கும்ளே காயம் அடைய, 2008ல் மொகாலி டெஸ்டில் (எதிர், ஆஸி.,) அறிமுக வாய்ப்பு பெற்றார். இதில் 7 விக்கெட் (5+2) வீழ்த்தி, வெற்றிக்கு கைகொடுத்தார். அடுத்து, அஷ்வின், ரவிந்திர ஜடேஜா வருகையால், அமித் மிஷ்ராவுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 22 டெஸ்ட் (76 விக்கெட்), 36 ஒருநாள் போட்டி (64), 10 'டி-20' போட்டி (16) சேர்த்து, சர்வதேச அளவில் 156 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
'ஹாட்ரிக்' சாதனை: பிரிமியர் 'டி-20' அரங்கில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் பட்டியலில் 7வது இடத்தில் (162 போட்டி, 174 விக்கெட்) உள்ளார். பிரிமியர் அரங்கில் 3 முறை 'ஹாட்ரிக்' சாதனை (டில்லி-2008, பஞ்சாப்-2011, ஐதராபாத்-2013) நிகழ்த்திய ஒரே பவுலர் மிஷ்ரா தான். இந்திய அணிக்காக கடைசியாக 2017ல் விளையாடினார். பிரிமியர் தொடரில் கடைசியாக 2024ல் லக்னோ அணிக்காக பங்கேற்றார். நேற்று ஓய்வை அறிவித்தார். இனி பயிற்சியாளர் அல்லது வர்ணனையாளராக பணியாற்ற காத்திருக்கிறார்.
வாய்ப்பு மறுப்பு
அமித் மிஷ்ரா கூறுகையில்,'' அனைத்துவித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன். 2000ல் முதல் தர போட்டியில் காலடி எடுத்து வைத்தேன். 25 ஆண்டு கிரிக்கெட் பயணம் மறக்க முடியாதது. சச்சின், தோனி, ரோகித் சர்மா போன்ற ஜாம்பவான்களுடன் விளையாடியுள்ளேன். கிரிக்கெட் தான் எனக்கு அடையாளத்தை கொடுத்தது. அறிமுகமான சமயத்தில் சிறப்பாக செயல்பட்டும், தொடர்ந்து 5 ஆண்டு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மன அழுத்தம் ஏற்பட்டது. வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் நுாறு சதவீத திறமை வெளிப்படுத்தினேன். இதனால் பெரிய அளவில் வருத்தம் இல்லை. எனக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி,''என்றார்.
மேலும்
-
சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்
-
தேர்தலுக்காக காஞ்சிபுரம் வந்த 598 'விவிபேட்' இயந்திரங்கள்
-
இன்று இனிதாக ...( 05.09.2025) புதுடில்லி
-
'ரீல்ஸ்' வெளியிட்ட மனைவியை அடித்து கொன்ற கணவன்
-
பஸ்சில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் ஆபத்தை உணராமல் அட்டூழியம்
-
ஜி.எஸ்.டி., குறைப்பு பொருளாதாரத்திற்கு முக்கிய வரப்பிரசாதம்