இந்தியாவிடம் வீழ்ந்தது மலேசியா * ஆசிய ஹாக்கியில் கலக்கல்

ராஜ்கிர்: ஆசிய ஹாக்கி 'சூப்பர்-4' சுற்றில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.
பீஹாரில் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் 12வது சீசன் நடக்கிறது. இந்தியா, 'நடப்பு சாம்பியன்' தென் கொரியா, மலேசியா, கஜகஸ்தான் உட்பட 8 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன.
லீக் சுற்று முடிந்து, இந்தியா, சீனா, மலேசியா, நடப்பு சாம்பியன் தென் கொரியா என நான்கு அணிகள் 'சூப்பர்-4' சுற்றுக்கு முன்னேறின. தற்போது, 'சூப்பர்-4' போட்டிகள் நடக்கின்றன. தென் கொரியாவுக்கு எதிரான முதல் போட்டியை இந்தியா 'டிரா' செய்தது.
நேற்று தனது இரண்டாவது போட்டியில் மலேசியாவை எதிர்கொண்டது. இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், தனது 250 வது போட்டியில் பங்கேற்றார். பைனல் வாய்ப்பை தக்கவைக்க, இதில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது இந்தியா. போட்டி துவங்கிய 2வது நிமிடத்தில் மலேசியாவின் ஷபிக் ஹசன், பீல்டு கோல் அடித்து, இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
17வது நிமிடம் இந்தியாவுக்கு 'பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. இதை கோலாக மாற்றினார் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங். அடுத்த 2வது நிமிடத்தில் இந்திய வீரர் சுக்ஜீத் சிங் (19), பீல்டு கோல் அடித்து கைகொடுத்தார்.
24 வது நிமிடம், ஷிலானந்த் லக்ரா அடித்த பந்து, மலேசிய கோல் கீப்பர் அகிமுல்லா மீது பட்டு, வலைக்குள் சென்று கோல் ஆனது. முதல் பாதியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் இந்திய அணிக்கு 'பெனால்டி கார்னர்' கிடைத்தது. இதில் விவேக் சாகர் பிரசாத் (38) கோல் அடித்து அசத்தினார்.
முடிவில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
சீனா அபாரம்
நேற்று நடந்த மற்றொரு போட்டியில் நடப்பு சாம்பியன் தென் கொரியா, சீன அணிகள் மோதின. சீன அணிக்கு சென் பென்ஹாய், 13, 43 வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடிக்க, சக வீரர் சென் குய்ஜுன் (43) தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். முடிவில் சீன அணி 3-0 என வெற்றி பெற்று, தென் கொரியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
யாருக்கு வாய்ப்பு
'சூப்பர்-4' சுற்றில் இதுவரை நடந்த போட்டி முடிவில் இந்தியா (4 புள்ளி), சீனா (3), மலேசியா (3), தென் கொரியா (1) அணிகள் நான்கு இடங்களில் உள்ளன. இன்று ஓய்வு நாள். நாளை கடைசி சுற்று போட்டி நடக்கின்றன. இதில் இந்திய அணி, சீனாவுக்கு எதிராக குறைந்தபட்சம் 'டிரா' செய்தால் போதும். 5 புள்ளியுடன் முதலிடம் பிடித்து பைனலுக்கு செல்லலாம். மறுபக்கம் மலேசியா, தென் கொரியா மோதலில் வெல்லும் அணிக்கு பைனல் வாய்ப்பு அதிகம் இருக்கும்.
மேலும்
-
சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்
-
தேர்தலுக்காக காஞ்சிபுரம் வந்த 598 'விவிபேட்' இயந்திரங்கள்
-
இன்று இனிதாக ...( 05.09.2025) புதுடில்லி
-
'ரீல்ஸ்' வெளியிட்ட மனைவியை அடித்து கொன்ற கணவன்
-
பஸ்சில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் ஆபத்தை உணராமல் அட்டூழியம்
-
ஜி.எஸ்.டி., குறைப்பு பொருளாதாரத்திற்கு முக்கிய வரப்பிரசாதம்