விலை குறைக்கப்பட்டதா என நானே கண்காணிப்பேன்: நிர்மலா சீதாராமன்

18


புதுடில்லி: ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து, பொருட்களின் விலை குறைக்கப்பட்டதா? என்பதை ஆய்வு செய்வதே தன்னுடைய முதன்மையான வேலை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் மிகப்பெரிய மாற்றத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதுமட்டுமில்லாமல், மக்களின் அன்றாட பயன்பாட்டு பொருட்களுக்கு வரி விலக்கும், பல்வேறு பொருட்களுக்கான வரியையும் குறைத்து அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார்.

இதன்மூலம், பேஸ்ட், பிஸ்கட், சர்க்கரை, நூடுல்ஸ், பாஸ்தா உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை குறைகிறது. இந்த நிலையில், வரும் செப்.,22ம் தேதி முதல் பொருட்களின் விலை குறைப்பு நடவடிக்கையில் நிறுவனங்கள் ஈடுபடுகின்றனவா என்பதை கண்காணிக்க இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது; ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கை வரும் செப்.,22ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக தொழில் மற்றும் வணிகத் துறையினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வரி குறைப்பினால் ஏற்பட்ட பொருட்களின் விலை குறைப்பு பலனை வாடிக்கையாளர்களுக்கு அளிப்போம் என்று அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

எனவே, தொழில்துறை மற்றும் வணிகத்துறையினரிடம் இருந்து நான் நேர்மறைத்தன்மையைக் காண்கிறேன். நிச்சயமாக அவர்கள் விலையை குறைத்து, வாடிக்கையாளர்களுக்கு பலனை அளிப்பார்கள் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

செப்.,22ம் தேதி முதல் பொருட்களின் விலை குறைப்பு பலன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறதா என்பதைக் கவனிப்பதே என்னுடைய வேலையாக இருக்கும், எனக் கூறினார்.

Advertisement