வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: இருவரிடம் விசாரணை

கும்மிடிப்பூண்டி:ஆந்திராவில் இருந்து, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 5,750 வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகளை பேருந்தில் கடத்திய இருவரிடம், வணிக வரித்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில், மாநில எல்லையோர சோதனைச்சாவடி உள்ளது. நேற்று போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆந்திர மாநிலம் ஹைதராபாத் பகுதியில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்தை சோதனையிட்டனர்.

அதில் பயணித்த திருத்தணியைச் சேர்ந்த நாகபூஷணம், 38, ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த உமர், 32, ஆகியோர், எந்த ஆவணமும் இன்றி, 5,750 பாக்கெட் வெளிநாட்டு சிகரெட்டுகள் கடத்தியது தெரியவந்தது. இதன் மதிப்பு 10 லட்சம் ரூபாய்.

இவற்றை பறிமுதல் செய்த போலீசார், சென்னை வணிக வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர். கடத்தலில் ஈடுபட்ட இருவரிடமும், வணிக வரித்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், வெளிநாட்டில் இருந்து ஹைதராபாத் விமான நிலையம் வரவழைத்து, அங்கிருந்து பேருந்தில் சென்னை கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.

Advertisement