வர்த்தக யுத்தத்தில் இறங்கும் சுதேசி நிறுவனங்கள்

புதுடில்லிஅமெரிக்காவின் அதிக வரி விதிப்பால், இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை பயன்படுத்துமாறு பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். குழந்தைகள் வெளிநாட்டு பிராண்டு பொருட்கள் பட்டியலை தயாரிக்க வேண்டும் என்றும், அவற்றை பயன்படுத்தாமல் இருக்க, மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பிரதமரின் இந்த சுதேசி அழைப்பை தொடர்ந்து, 'மெக்டொனால்ஸ், பெப்சி' உள்ளிட்ட அமெரிக்க பிராண்டுகளை புறக்கணிக்க கோரும் பதிவுகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
அமெரிக்காவின் 'கோல்கேட் பாமொலிவ்' நிறுவனத்தின் இந்திய போட்டியாளரான டாபர், அமெரிக்க பொருட்களை தவிர்க்குமாறு விளம்பரம் செய்திருக்கிறது.
கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான டாபர், ஒரு பத்திரிகை விளம்பரத்தில் கோல்கேட் டூத் பேஸ்ட் போல் தோன்றும் பெயரிடப்படாத படங்களை வெளியிட்டது.
தன் போட்டியாளரை நேரடியாகச் சொல்லாமல், இந்தியாவின் பிரபலமான டூத் பேஸ்ட், அமெரிக்க நிறுவன தயாரிப்பு என்றும், டாபர் தான் சுதேசிகளின் விருப்பம் என்றும் விளம்பரத்தில் தெரிவித்தது.
விளம்பரத்தில் இடம்பெற்றுள்ள, 'அங்கு பிறந்தது இங்கு அல்ல' என்ற வாசகம், பெயர் எதுவும் இல்லாத டூத் பேஸ்ட் படத்தின் பின்னணியில் இடம் பெற்றாலும், அமெரிக்க கொடியின் சிவப்பு, வெள்ளை, நீல நிற வடிவமைப்பில் அச்சிடப்பட்டிருந்தது, விஷயத்தை சொல்லாமல் சொல்கிறது.
இது குறித்து பல்வேறு பேச்சுகள் கிளம்பவும், இந்த விளம்பரத்தை பற்றி டாபர் கருத்து தெரிவிக்க மறுத்தது. கோல்கேட் நிறுவனமும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை.
கோல்கேட் தற்போது இந்திய டூத் பேஸ்ட் சந்தையில் 43 சதவீத பங்கு வகிக்கிறது. பெப்சோடென்ட் உள்ளிட்ட பிராண்டுகளை கொண்ட யுனிலீவரின் இந்திய பிரிவு இரண்டாம் இடத்திலும், 17 சதவீத பங்குடன் டாபர் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய பால் கூட்டுறவு நிறுவனமான அமுல், தன் சமூக வலைதளங்களில், 'மேட் இன் இந்தியா' தயாரிப்புகளை சித்தரிக்கும் கார்ட்டூன்களை வெளியிட்டுள்ளது.
யாகூ, கூகுள் மெயில் போன்றவை வருவதற்கு முன்னர் பிரபலமாக இருந்த இந்திய மின்னஞ்சல் சேவை ரெடிப். அது, தன் சேவையை இந்தியாவின் மெயில் என்று தற்போது மார்தட்டி விளம்பரம் செய்துள்ளது.
இந்நிறுவனம் வாடிக்கையாளர்களின் வணிக தகவல்களை உள்ளூரிலேயே பாதுகாப்பதாகவும், தனிப்பட்ட தகவல் கசியும் ஆபத்தில்லை என்றும் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுடன் இந்தியாவின் வர்த்தக உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில், இந்திய நிறுவனங்கள் தங்கள் உள்ளூர் தயாரிப்புகளுக்கான விளம்பரங்களை தீவிரப்படுத்தி வருவது, இந்திய வாடிக்கையாளர்களிடம் எடுபடுமா, சந்தையில் அவற்றின் பங்கை அதிகரிக்குமா என்பது போக போகத்தான் தெரியும்.
இந்திய நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளுக்கான விளம்பரங்களை தற்போது தீவிரப்படுத்தி வருகின்றன.










