செங்கோட்டையனுக்கு ஜெ., ஆன்மா தோல்வியை தரும்; உதயகுமார் சாபம்

13

மதுரை : ''ஒற்றுமை என்ற பெயரை வைத்துக்கொண்டு அ.தி.மு.க.,வுக்கு பின்னடைவை ஏற்படுத்தி விடலாம் என்ற வயிற்றெரிச்சல் மனிதர்களுக்கு ஜெயலலிதா ஆன்மா தோல்வியைத் தான் தரும்'' என மறைமுகமாக செங்கோட்டையனுக்கு சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் சாபம் விட்டார்.

அ.தி.மு.க., உட்கட்சி விவகாரத்தில் பிரிந்தவர்களை 'மறப்போம்; மன்னிப்போம்' என மீண்டும் இணைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்தார். இதனால் அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டது. செங்கோட்டையன் விவகாரம் குறித்து பழனிசாமி கருத்து சொல்லாத நிலையில், சட்டசபையில் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மதுரையில் நேற்று அவர் கூறியதாவது:

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் ஏதாவது குழப்பம் ஏற்படுத்த முடியுமா என முதல்வர் ஸ்டாலினின் பகல் கனவிற்கு சில பேர் இரையாகி 'அங்கே பிரச்னை உள்ளது; பிளவு உள்ளது' என மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். இதுபோன்ற சவால்களை சாதனையாக பொதுச்செயலாளர் பழனிசாமி மாற்றி கொண்டிருப்பதை சிலர் பொறுக்க முடியாமல் அவதுாறு, புரளி, கதை, கட்டுரை, கற்பனைகளை பரப்பினார்கள். அது இன்று புஸ்வாணமாகி போனது.

பழனிசாமியின் எழுச்சி பயணத்தை கண்டு சிலருக்கு வயிற்று எரிச்சல் ஏற்பட்டு இருக்கலாம். அது தங்கள் இயலாமையால் ஏற்படும் பொறாமை. ஒற்றுமை என்ற பெயரை வைத்துக் கொண்டு அ.தி.மு.க., செல்வாக்கிற்கு பின்னடைவை ஏற்படுத்தி விடலாம் என்று கனவு காணும் வயிற்றெரிச்சல் மனிதர்களுக்கு ஜெ., ஆன்மாவும், மக்களும் தோல்வியைத்தான் தருவார்கள்.

எழுச்சி பயணத்தை மடைமாற்றம் செய்ய வயிற்று எரிச்சல் மனிதர்கள் 'இங்கே சென்றார்கள், அங்கே சென்றார்கள், அவரை சந்தித்தார்கள், இவரை சந்தித்தார்கள்' என்று செய்தி வருகிறது. ஆனால் அந்த அமித்ஷாவே பழனிசாமி வீட்டில் விருந்து சாப்பிட்டு, 'பழனிசாமி தலைமையில் ஜெ., ஆட்சி மீண்டும் மலரும்' என பறைசாற்றி விட்டு சென்றார்.

அ.தி.மு.க., மக்கள் இயக்கம். இதை கட்டி காத்து வரும் பழனிசாமிக்கு வாழ்த்துப்பா பாடாவிட்டாலும் பரவாயில்லை.

நீங்கள் அசைத்துப் பார்க்கலாம் என்று கனவு கண்டால் தோற்பது நீங்களாகத்தான் இருப்பீர்கள். 'அவரை மாற்றுவோம் இவரை மாற்றுவோம்' என்று சொல்பவர்களை எல்லாம் மாற்றிவிட்டு பழனிசாமி ஒருவர் தான் முதல்வர் என்று மக்கள் தீர்ப்பு எழுதுவார்கள்.

இவ்வாறு கூறினார்.

Advertisement