திருச்சியில் 'உங்கள் விஜய்'


கிண்டல்,கேலி,எதிர்ப்பு என்று வந்த அத்தனை விமரிசனங்களையும்,விமர்சகர்களையும் தவிடுபொடியாக்கும் திருச்சியில் உங்கள் விஜய் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடந்துள்ளது.

நேருவின் கோட்டையில் பெரிய ஓட்டை என்று சொல்லுமளவு அப்படியொரு கூட்டம்.

சாதாரணமாக திருச்சி விமான நிலையத்தில் இருந்து பரப்புரை செய்வதற்காக தேர்வு செய்யப்பட்ட மரக்கடை பகுதிக்கு வந்து சேர அதிகபட்சம் நாற்பது நிமிடத்தில் வந்து சேர்ந்துவிடலாம் ஆனால் விஜய் வந்து சேர நான்கு மணிநேரமாகியது காரணம் வழியெங்கும் அவர் வந்த வாகனத்தை மறித்து தொண்டர்கள் தந்த வரவேற்புதான் காரணம்.

திரும்பிய பக்கம் மெல்லாம் முப்பது வயதிற்குட்பட்ட இளைஞர்கள் வழியெங்கும் இளைஞிகள்.

கூட்டம் தன்னெழுச்சியாக வந்த கூட்டம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை

வழக்கம் போல பாஜக கொள்கை எதிரி திமுக அரசியல் எதிரி என்கின்ற பாணியிலிருந்து கொஞ்சம் முன்னேறி திருச்சி தொகுதி பிரச்னைகளை பேசியிருக்கிறார் ஆனால் அவர் பேசுவதைக் கேட்பதைவிட அவரை அருகில் சென்று பார்த்துவிட வேண்டும் தங்களது மொபைலில் அவரது முகத்தை பதிவு செய்துவிட வேண்டும் என்பதுதான் கூடிய கூட்டத்தினரில் பெரும் ஆர்வமாக இருந்தது.

அவர் மீதான விமர்சனங்கள் எத்தகையதாக இருந்தாலும் பராவாயில்லை எங்களுக்கு தலைவர் விஜய் என்பதை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொண்ட கூட்டமே அது.

இந்தக் கூட்டம் எத்தனை நாளைக்கு,இவர்கள் எல்லாம் ஓட்டுப்போடுவார்களா?இவரால் வழிநடத்த தெரியுமா? என்று என்னதான் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் மென்று முழுங்கினாலும் தமிழக வெற்றிக் கழகத்தையோ அதன் தலைவரையோ வருங்கால அரசியலில் தவிர்க்கமுடியாது என்பதையே திருச்சி கூட்டம் நிரூபித்தது.

-எல்.முருகராஜ்

Advertisement