பேச்சு, பேட்டி, அறிக்கை

அ.தி.மு.க., மருத்துவ அணி இணை செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான டாக்டர் சரவணன் அறிக்கை:

இந்தியாவிலேயே நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு, மரணம் அடைவோர் பட்டியலில், மஹாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து, தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. 2024ம் ஆண்டு, 4.80 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டதில், 43 பேர் மரணம் அடைந்துள்ளனர். நடப்பாண்டில் ஆகஸ்ட் வரை, 3.67 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 20 பேர் இறந்துள்ளனர்.

நடப்பாண்டு பட்ஜெட்டில், 'தமிழகத்தில் வெறிநாய் கடியால் ஏற்படும் இறப்புகளை கட்டுப்படுத்த, 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது' என குறிப்பிட்டிருக்காங்க... ஆனா, அது ஏட்டுல மட்டும் தான் இருக்குது போலும்!


பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான, தி.மு.க., அரசு அறிவிப்புகளை மட்டும் தான் வெளியிடும். பின், கும்பகர்ணன் உறக்கத்திற்கு சென்று விடும். 'சண்டி மாடு தானாக ஓடாது... தார்க்குச்சியால் குத்தினால் தான் ஓடும்' என்று கிராமப்புறங்களில் கூறுவர். அதுபோலத் தான் செயல்படாத சண்டி மாடாக, தி.மு.க., அரசு இருக்கிறது; அதை செயல்பட வைக்கும் தார்க்குச்சியாக, பா.ம.க., திகழ்கிறது.
அந்த தார்க்குச்சியும் இப்ப ரெண்டா உடைஞ்சு போய் கிடக்குதே!


நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு:

தமிழகத்தில் தனித்து போட்டியிட்டு, 8.5 சதவீதம் ஓட்டுகள் வாங்கி, அரசியல் அங்கீகாரத்தை நாம் தமிழர் கட்சி பெற்று உள்ளது. தமிழகத்தில், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான். அ.தி.மு.க., - தி.மு.க., இதுவரை தனித்து, 234 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளதா?
ஆனா, காங்கிரசுக்கு பிறகு, அந்த ரெண்டு கட்சிகளை தவிர, வேற யாராலும் ஆட்சி, அதிகாரத்தை தொட்டுக்கூட பார்க்க முடியலையே!


பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் பேட்டி:

ஒரே வார்த்தையில், 'கல்விக்கு மத்திய அரசு நிதி தரவில்லை' என்கின்றனர்; அது உண்மையல்ல. மத்திய அரசு தரும் நிதியை, தமிழக அரசு சரியாக பயன்படுத்துவதில்லை; பயன்படுத்தியதற்கான சரியான கணக்கை, மத்திய அரசுக்கு தெரிவிப்பதில் லை. அதனால், அடுத்த கட்ட நிதியை பெற முடியாமல், மத்திய அரசு மீது பழி போடுகின்றனர்.
மத்திய அரசு ஒதுக்கிய நிதி பற்றிய புள்ளி விபரங்களை புட்டு புட்டு வச்சு, பதிலடி தரலாமே!

Advertisement