ஊடுருவல்காரர்களை வெளியேற்றுவோம்: பிரதமர் மோடி உறுதி

11


பாட்னா: '' நாட்டின் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களுக்கு ஊடுருவல்காரர்கள் அச்சுறுத்தலாக மாறி உள்ளனர். அவர்களை வெளியேற்றுவதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம்,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


பீஹார் சென்றுள்ள பிரதமர் மோடி ரூ.36 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவடைந்த பணிகளையும் துவக்கி வைத்தார். பல்வேறு ரயில் திட்டங்களையும் துவக்கி வைத்தார்.

நெருக்கடி



இதன் பிறகு பிரதமர் மோடி பேசியதாவது: காங்கிரசும் ராஷ்ட்ரிய ஜனதா தளமும், பீஹாரின் பெருமைக்கு மட்டும் அல்லாமல், பீஹாரின் அடையாளத்துக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளன. இன்று இந்தியாவின் கிழக்கு மற்றும் சீமாஞ்சல் பகுதிகளில், சட்டவிரோத ஊடுருவல் காரணமாக பெரிய மக்கள் தொகை நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. பீஹார், மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட பல மாநில மக்கள், தங்களின் சகோதரிகள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர். இதனால் தான், மக்கள் தொகை இயக்கம் குறித்து செங்கோட்டையில் இருந்து அறிவித்தேன்.


ஆனால், காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் ஊடுருவலை ஆதரித்து வருகின்றன. அவர்களை பாதுகாப்பதுடன், வெட்கம் இல்லாமல் அவர்களுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி , பாத யாத்திரை நடத்துகின்றனர். அவர்கள், நாட்டின் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த விரும்புகின்றனர். ஊடுருவல்காரர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டும்.


@quote@ஊடுருவலை நிறுத்துவது தேஜ கூட்டணியின் கடமை. இதனை காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியினர் தெளிவாக கேட்டுக் கொள்ள வேண்டும்.quote

வாக்குறுதி



ஊடுருவல்காரர்களை பாதுகாப்பவர்களுக்கும், அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கும் சவால் விடுகிறேன். நீங்கள் அவர்களை பாதுகாக்க எவ்வளவு முயற்சி செய்தாலும், அவர்களை வெளியேற்ற தொடர்ந்து பணியாற்றுவோம். இது மோடியின் வாக்குறுதி. ஊடுருவல்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். இதன் பலன்களை நீங்கள் பார்ப்பீர்கள். காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியினர் எழுப்பும் ஊடுருவலுக்கு ஆதரவாக எழுப்பும் பிரச்னைகளுக்கு உரிய பதிலடி தர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

லட்சாதிபதிகள்



அவ்விரு கட்சிகளும் கடந்த10 ஆண்டுகளாக பதவியில் இல்லை. இதற்கு பீஹாரின் தாயார்கள் மற்றும் சகோதரிகளே காரணம். அவர்களுக்கு எனது சிறப்பு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ராஷ்ட்ரிய ஜனதா தள ஆட்சியின் போது, கொலை, பலாத்காரம் மற்றும் வன்முறைக்கு பீஹாரைச் சேர்ந்த தாய்மார்களும், சகோதரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இரட்டை இன்ஜின் நிர்வாகத்தில் பெண்கள் லட்சாதிபதிகளாக மாறியுள்ளனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement