தேர்தல் வாக்குறுதிகளில் 10% கூட நிறைவேற்றவில்லை: திமுகவை விளாசிய அண்ணாமலை

55

சென்னை: தேர்தல் வாக்குறுதிகளில் 10% கூட முழுமையாக நிறைவேற்றாமல், நாளொரு நாடகத்தை அரங்கேற்றிக்கொண்டிருந்த திமுக அரசின் லட்சணம், ஆட்சியின் இறுதி ஆண்டில் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.


சட்டசபையில் துறை வாரியாக வெளியிடப்பட்ட அறிவிப்புகளில், 256 அறிவிப்புகளை கைவிட, தமிழக அரசு முடிவு செய்து உள்ளது என நமது தினமலர் நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது. இந்த செய்தியை மேற்கோள் காட்டி தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை:

ஆட்சிக்கு வந்ததில் இருந்து, வெற்று விளம்பரத்துக்காக அறிவிப்புகளை வெளியிட்டு, நான்கு ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வந்த திமுக அரசு, தற்போது, சட்டசபையில் வெளியிட்ட 256 திட்டங்களை, நிறைவேற்ற சாத்தியமில்லை என்பதால், கைவிடுவதாக முடிவெடுத்துள்ள செய்தி வெளியாகியிருக்கிறது.



கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 10% கூட முழுமையாக நிறைவேற்றாமல், நாளொரு நாடகத்தை அரங்கேற்றிக்கொண்டிருந்த திமுக அரசின் லட்சணம், ஆட்சியின் இறுதி ஆண்டில் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது. சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம் என்றார் முதல்வர் ஸ்டாலின்.


சொன்னது எதையும் செய்யவில்லை என்பதற்கான சாட்சி, கைவிடப்பட்ட இந்த 256 அறிவுப்புகள்தான். நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில், சொல்லாமல் செய்தது, ஊர் ஊராக அவரது தந்தையின் சிலை வைத்தது மட்டும் தான். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement