1967,1977 தேர்தல்களின் வெற்றி; 2026 தேர்தலிலும் நிகழ்த்துவோம் என்கிறார் விஜய்

சென்னை: 1967 மற்றும் 1977 தேர்தல்களின் வெற்றி விளைவை 2026 தேர்தலிலும் நிகழ்த்திக் காட்டுவோம் என தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம். “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” என்ற நம் மக்கள் சந்திப்பை, பல்வேறு அரசியல் திருப்புமுனைகளை அமைத்துத் தந்த திருச்சியில் திக்கெட்டும் கேட்கும் வகையில் கடந்த வாரம் (செப்டம்பர் 13) தொடங்கினோம்.
அஞ்சி நடுங்கும்…!
நம்மைப் பற்றி, ஆள் வைத்துப் பொய்யான கதையாடல்களைச் செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர். இந்த நடுக்கத்தினாலேயே நாம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்கும் பொழுதெல்லாம் யாருக்கும் விதிக்காத கடுமையான விதிமுறைகளை நமக்கு விதிக்கின்றனர். ஆனால், நாம் நம் கொள்கைத் தலைவர்களின் வழியில் முதன்மைச் சக்தியாக, உண்மையான மக்களாட்சியை அமைத்திட நம் பணிகளை இன்னும் தீவிரப்படுத்துவோம்.
அன்பும் பாசமும்
இந்த எழுச்சிமிகு தருணத்தைச் சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி. நேற்றைய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, முழு ஒத்துழைப்பு நல்கிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழு, தன்னார்வலர்கள் குழு, தனியார் பாதுகாவலர்கள் குழு, மருத்துவக் குழு ஆகியவற்றுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றேன். மேலும் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட மக்கள் நமக்களித்த வரவேற்பும் நம் மீது காட்டிய அன்பும் பாசமும் நிகரில்லாதவை.
வெற்றி நிச்சயம்
இவை எக்காலத்திற்கும் என் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்திருக்கும். இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன். இதற்காக எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. தமிழக மக்களுக்கான முதன்மைச் சக்தியான நாம், அவர்களுக்காக எதிலும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்.
1967 மற்றும் 1977 தேர்தல்களின் வெற்றி விளைவை 2026 தேர்தலிலும் நிகழ்த்திக் காட்டுவோம். புதியதோர் உலகு செய்வோம். கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம். நல்லதே நடக்கும்.வெற்றி நிச்சயம். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.




மேலும்
-
3 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது அறிவித்தது தமிழக அரசு: பாடகர் யேசுதாஸுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு
-
இந்தியா நெருங்கிய கூட்டாளி; வரி விதித்தது குறித்து ஐநா சபையில் அமெரிக்க அமைச்சர் பேச்சு
-
காரீப் பயிற்சி
-
எச்1பி விசாவில் அடுத்த மாற்றம்
-
ட்ரோன்கள் பறந்ததால் பதற்றம் விமான நிலையங்கள் மூடப்பட்டன