வங்கதேசத்தில் ஹிந்து கோவில் சேதம்: சிலைகளை உடைத்து அட்டூழியம் செய்த கும்பல்!

12


டாக்கா: வங்கதேசத்தில் ஹிந்து கோயில் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் கோவிலில் இருந்த 7 சிலைகள் சேதம் அடைந்துள்ளன.


நம் அண்டை நாடான வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, பதவி விலகியதைத் தொடர்ந்து, அங்கு ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை அதிகரிக்கத் துவங்கியது. ஹிந்து கோவில்கள் இடிக்கப்படுவதும், ஹிந்துக்கள் தாக்கப்படுவதும் தொடர் கதையாகவே உள்ளது. தற்போது அங்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சியில் இருக்கிறது. ஹிந்து கோவில்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரி மத்திய அரசு பலமுறை வலியுறுத்தி இருக்கிறது.


இந்நிலையில், ஜமால்பூர் மாவட்டத்திலுள்ள சரிஷாபாரி பகுதிக்குட்பட்ட ஹிந்து கோயிலில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில், கோவிலில் இருந்த 7 சிலைகள் கடுமையாக சேதம் அடைந்து உள்ளன. துர்கா பூஜைக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டாவது முறையாகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.


இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது: ஹிந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றோம். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினோம். இந்த விவகாரம் தொடர்பாக ஷிம்லாபள்ளி கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான ஹபிபுர் ரஹ்மான் என்பவரை கைது செய்துள்ளோம். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


கோவிலில் சிலைகள் சேதம் அடைந்து கிடக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஹிந்து கோவிலை சேதப்படுத்திய, சம்பவத்திற்கு இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

Advertisement