பாக். நடவடிக்கையை பொறுத்து ஆப்பரேஷன் சிந்தூர் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம்: அமைச்சர் ராஜ்நாத் சிங்

5

ரபாத்(மொராக்கோ): ஆப்பரேஷன் சிந்தூர் 2, ஆப்பரேஷன் சிந்தூர் 3 என்று எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம். அதை நாங்கள் சொல்லமுடியாது, பாகிஸ்தானின் நடவடிக்கையை பொறுத்தது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்.

மொராக்கோ பாதுகாப்புத்துறை அமைச்சர் அப்தெல்டிப் லௌடியின் அழைப்பின் பேரில் 2 நாள் அரசு முறைப்பயணமாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மொராக்கோ சென்றுள்ளார். வட ஆப்பிரிக்க நாட்டுக்கு இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒருவர் செல்வது இதுவே முதல் முறையாகும்.

2 நாள் நிகழ்ச்சியில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள இருக்கும் அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்குள்ள இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாடினார். நிகழ்வில் அவர் பேசியதாவது;

நீங்கள் மொராக்கோவிலிருந்து இந்தியாவுக்கு திரும்பி வந்து தேர்தலில் போட்டியிட விரும்பினால், லோக்சபாவில் 33% இடஒதுக்கீடு பெற உங்களுக்கு உரிமை உண்டு.

சர்வதேச சமூகத்தில் இந்தியாவின் அந்தஸ்து உயர்ந்து கொண்டு வருவதை நீங்கள் உணர முடிகிறது என்பதை குறிப்பிட்டுச் சொல்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு முன்னர், சர்வதேச சமூகத்தில் இந்தியா பேசும் போது, அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை.

ஆனால் இன்றோ இந்தியா சர்வதேச மன்றத்தில் பேசும் போது, முழு உலகமும் அதை கவனித்துக் கேட்கிறது. இதற்கு முன்னர் நிலைமை இப்படி இருந்தது இல்லை.

அனைத்து அரசியல் மற்றும் உலகளாவிய சவால்கள் முன்னே இருந்தாலும், இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாகும்.

பயங்கரவாதிகள் இங்கு வந்து எங்கள் மக்களை அவர்களின் மதத்தைக் கேட்டு கொன்றனர். நாங்கள் அவர்களின் மதத்தின் அடிப்படையில் அல்ல, அவர்களின் செயல்களின் அடிப்படையில் கொன்றுள்ளோம்.

எல்லையில் அல்ல, அவர்களின் நிலத்திற்குள் 100 கி.மீ தூரத்தில் பயங்கரவாத மையங்களை நாங்கள் அழித்தோம். மசூத் அசாரின் குடும்பத்தை இந்தியா துண்டாடிவிட்டதாக ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி கூறினார்.

போர் நிறுத்தத்திற்கு பாகிஸ்தான் வலியுறுத்தியதால் நாங்கள் அதற்கு ஒப்புக்கொண்டோம். நண்பர்களை மாற்றலாம், ஆனால் வீட்டை மாற்ற முடியாது என்று வாஜ்பாய் கூறியதால் நல்ல உறவுகளை நாங்கள் விரும்புகின்றோம், அவர்களை சரியான பாதைக்கு கொண்டு வர முயற்சிக்கிறோம்.

பிரதமரும் ஆப்பரேஷன் சிந்தூர் ஒரு இடைநிறுத்தம் என்று தான் கூறி உள்ளார். அது மீண்டும் தொடங்கலாம். ஆப்பரேஷன் சிந்தூர் 2, ஆப்பரேஷன் சிந்தூர் 3 என்று எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம். அதை நாங்கள் சொல்லமுடியாது, அவர்களின் (பாகிஸ்தான்) நடவடிக்கையை பொறுத்தது. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு பதில் கிடைக்கும்.

பஹல்காம் தாக்குதலுக்கு மறுநாள் ஏப்.23 அன்று முப்படைத் தலைவர்கள், பாதுகாப்புச் செயலாளருடனான சந்திப்பின் போது அரசு ஒரு நடவடிக்கையை முடிவு செய்தால் அவர்கள் அதற்கு தயாரா என்பது தான் நான் கேட்ட முதல் கேள்வி. அவர்கள் ஒரு நொடி கூட தாமதிக்காமல் தயார் என்று பதிலளித்தனர்.

அதன் பின்னர் பிரதமர் மோடியை நாங்கள் அணுகினோம். அவரும் எங்களை தாக்குதல் நடத்தச் சொன்னார் அதன் பின்னர் என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்த்தீர்கள்.

அமெரிக்காவின் வரிவிதிப்பு விவகாரத்தில் நாங்கள் எதிர்வினை ஆற்றவில்லை. பரந்த மனப்பான்மை கொண்டவர்கள் எதற்கும் உடனடியாக எதிர்வினையாற்ற மாட்டார்கள்.

இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

Advertisement