ஜிஎஸ்டி வரி குறைப்பு எதிரொலி: ஆவின் பால் பொருட்களின் விலை குறைப்பு

12

சென்னை: ஜிஎஸ்டி வரி குறைப்பை தொடர்ந்து ஆவின் பால் பொருட்களின் விலைகளை குறைத்து ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.


@1brமத்திய அரசு செய்துள்ள ஜிஎஸ்டி வரிக்குறைப்பு இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. அதன்படி பல்வேறு நிறுவனங்களும் தங்கள் உற்பத்தி பொருட்களின் விலையை குறைத்துள்ளன.தமிழகத்தில் பால், பால் பொருட்களை விற்பனை செய்யும் ஆவின் நிறுவனமும், விலையை குறைத்துள்ளது. ஆனால், அதன் எம்.ஆர்.பி., விலையை குறைக்காமல் வரியை மட்டும் குறைத்துள்ளது. இது, பல்வேறு தரப்பினர் மத்தியிலும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது. பாமக தலைவர் அன்புமணி, 'ஆவின் விலைக்குறைப்பு என்ற பெயரில் நாடகம் நடத்துவதாக' குற்றம் சாட்டியுள்ளார்.


ஜிஎஸ்டி வரிக்குறைப்பின் பலன் மக்களுக்கு கிடைக்காத வகையில் செயல்படுவதாக, நெட்டிசன்கள் ஆவின் மீது இணையத்தில் சரமாரியாக புகார் எழுப்பி வருகின்றனர்.


ஆவின் விலைக்குறைப்பு விபரம் பின்வருமாறு:


* 1 லிட்டர் நெய் ரூ.690ல் இருந்து ரூ.650ஆக குறைக்கப்பட்டு உள்ளது.


* 50 மி.லி.நெய் ரூ.48 இருந்தது, இனி ரூ.45க்கு விற்பனை செய்யப்படும். 5 லிட்டர் நெய் ரூ.3600 இருந்தது, இனி ரூ.3,250க்கு விற்பனை செய்யப்படும். 15 கிலோ நெய் ரூ.11,880 இருந்தது, இனி ரூ.10,725 க்கு விற்பனை செய்யப்படும்.

* ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்ட 200 கிராம் பனீர் ரூ.110க்கும், ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்ட 500 கிராம் பனீர் ரூ.275க்கும் விற்பனை செய்யப்படும் என்று ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.




ஆவின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியா அளவில் கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்களை காட்டிலும் ஆவின் நிறுவனம் பொது மக்கள் நலன் கருதி மிகவும் குறைந்த விலையில் தரமான பால் மற்றும் பால் உப பொருட்களை விற்பனை செய்து வருகிறது. ஆவின் விற்பனை மூலம் வரும் வருவாய் 90 சதவீதத்துக்கு மேல் பால் உற்பத்தியாளர்களுக்கே வழங்கப்படுகிறது.

அவ்வபோது , சந்தை நிலவரத்துக்கு ஏற்றவாறு இதர கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்கள் போல் பால் மற்றும் பால் பொருட்களின் விலையை மாற்றி அமைக்காமல் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களின் நலன் சார்ந்து பால் உப பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.


தற்போது மத்திய அரசு ஜிஎஸ்டி விகிதம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு குறைந்த விலையில் பால் மற்றும் பால் உபபொருட்களை விற்பனை செய்வதாலும் மற்றும் பால் தரத்துக்கு ஏற்ப பால் கொள்முதல் செய்வதாலும் ஆவின் நிறுவனம் நிதி சுமையை கவனத்தில் கொண்டு சந்தையில் குறைவான விலையில் தரத்துடன் அனைத்து பால் பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement