மதமாற்றவாதிகளுக்கு படியளந்து ஹிந்து மதத்தை அழிக்க முயற்சி; தி.மு.க., அரசுக்கு பா.ஜ., கண்டனம்

9

சென்னை: 'அரசு சமூக நீதி விடுதியில், மாணவியரை கட்டாய மதமாற்றம் செய்வதை, ஒரு போதும் அனுமதிக்க முடியாது' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:



சிவகங்கை மாவட்டம், காளையார் கோவிலில் உள்ள ஆதிதிராவிடர் சமூக நீதி விடுதியில், பணியாற்றும் லட்சுமி என்பவர், மாணவியரை மதமாற்றத்திற்கு கட்டாயப்படுத்துவதாகவும், மறுக்கும் மாணவியரை வன்கொடுமை செய்வதாகவும், உணவுப் பொருட்களில் ஊழல் செய்வதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.




முதல்வர் ஸ்டாலின் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு விடுதி மாணவியரின் பெற்றோர் புகார் அனுப்பி உள்ளனர்.



கட்டடங்களின் பெயரை மட்டும் விதவிதமாக மாற்றுவதால் என்ன பயன்? அரசு சமூக நீதி விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு, விடுதிக்குள்ளேயே ஜாதி கொடுமைகளும், மத ரீதியான அடக்குமுறைகளும் நடப்பதுதான் தி.மு.க.,வின் சமூகநீதியா?

அரசு விடுதியில் பணிபுரியும் ஊழியருக்கு, மதமாற்றம் செய்யும் துணிச்சல் எங்கிருந்து வந்தது? பிற மதங்களை பாதுகாத்து, ஹிந்துக்களை மதமாற்றம் செய்தால், தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்ற இளக்காரமா; அல்லது தி.மு.க.,வே, மதமாற்றவாதிகளுக்கு படியளந்து, ஹிந்து மதத்தை அழிக்க முயற்சிக்கிறதா?




அதிலும், மதமாற்றத்திற்கு மறுக்கும் பிள்ளைகளை, பாலியல் ரீதியாக துன்புறுத்துவது கோரத்தின் உச்சமல்லவா? சமத்துவத்தை பேணும் நம் நாட்டில் மாணவ - மாணவியர் இடையே இதுபோன்ற கட்டாய மதமாற்றங்கள் ஆபத்தானவை.



லட்சுமியை பணிநீக்கம் செய்வதோடு, பிற அரசு விடுதிகளையும் முதல்வர் நேரடியாக கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement