நள்ளிரவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு; நார்வே மக்கள் வெளியே வர தடை

15

ஆஸ்லோ: நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. போலீசார் சந்தேகப்படும்படியான மூவரை கைது செய்துள்னளர்.

பார்க்வீன் மற்றும் பைல்ஸ்ட்ரெட் பகுதியில் இந்த இரண்டு குண்டுவீச்சு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியில் வசிப்போர் அச்சமும், பீதியும் அடைந்தனர்.

நார்வே போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அந்த பகுதியைச் சுற்றி வளைத்த அவர்கள், தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு வெடிக்காமல் இருந்த கையெறி குண்டு ஒன்றை கண்டுபிடித்து, செயலிழக்கச் செய்தனர்.

அங்கு சுற்றித்திரிந்த சந்தேக நபர்கள் மூவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து ஆஸ்லோ காவல்துறை தலைவர் பிரையன் ஸ்கொட்னஸ் கூறியதாவது;

மத்திய ஆஸ்லோ பகுதியில் குண்டு வெடித்துள்ளது. தேடுதல் வேட்டையின் போது சந்தேகத்தின் பேரில் 3 பேரை கைது செய்திருக்கிறோம். அவர்களுடன் தொடர்புடைய மற்றவர்களையும் தேடி வருகிறோம்.

சம்பவம் நடந்த இடம், தற்போது முழு காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. பிஸ்லெட் ஸ்டேடியத்தில் இருந்து கார் ஒன்று சந்தேகத்துக்கு இடமாக சென்றதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். காரில் இருந்து இரு கையெறி குண்டுகளை அவர்கள் வீசிச் சென்றதாக சம்பவத்தை பார்த்தவர்கள் கூறி இருக்கின்றனர். விசாரணை தொடர்கிறது.

இவ்வாறு காவல்துறை தலைவர் பிரையன் ஸ்கொட்னஸ் கூறினார்..

குண்டுகள் வெடித்த பகுதிக்குள் யாரும் நுழைய வேண்டாம், குடியிருப்புகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அப்பகுதி மக்களை போலீசார் அறிவுறுத்தி இருக்கின்றனர்.

Advertisement