டீ விலையை விட குறைவாக ஒரு ஜி.பி., டேட்டா கட்டணம் பிரதமர் மோடி பேச்சு

1

புதுடில்லி,:இந்தியாவில் ஒரு கப் தேநீரை விட ஒரு ஜி.பி., ஒயர்லெஸ் டேட்டாவின் விலை குறைவு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டில்லியில் 'இந்தியா மொபைல் காங்கிரஸ் 2025' மாநாட்டை அவர் துவக்கி வைத்து பேசினார்.

அப்போது மேலும் தெரிவித்ததாவது:

இந்திய ஜனநாயக அமைப்பு முறை, தொழில் துவங்குவோரை அரசு வரவேற்கும் நடைமுறை, தொழில் துவங்க எளிய கொள்கைகள் ஆகியவற்றால், முதலீட்டுக்கு ஆதரவான நாடு என்ற பெயரை உலகெங்கும் நம்நாடு பெற்றிருக்கிறது.

தொலைத்தொடர்பிலும், 5ஜி தொழில்நுட்பத்திலும் உலகின் இரண்டாவது பெரிய சந்தையாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட 4ஜி தொழில்நுட்ப தொகுப்பு சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகளவில் இதை அறிமுகப்படுத்திய ஐந்தாவது நாடு என்ற பெருமையை பெற்றுள்ளோம்.

பயனர்களின் தரவு நுகர்வை பொறுத்தவரை, உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக நாம் இருக்கிறோம். நம்நாட்டில் இன்டர்நெட் தொடர்பு ஆடம்பரம் அல்ல; வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை உணர்த்துகிறது. இப்போது நம் நாட்டில் ஒரு ஜி.பி., ஒயர்லெஸ் டேட்டா விலை ஒரு கப் தேநீர் விலையை விட குறைவு .

ஒரு காலத்தில் 2ஜி தொழில்நுட்பத்துக்காக சிரமப்பட்ட நம் நாட்டில், இப்போது 5ஜி தொழில்நுட்பம் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாவட்டத்தையும் சென்றடைந்துள்ளது.

உலகம் முன்னெப்போதையும் விட அதிக தரவுகளை உருவாக்குகிறது. இதனால் தரவுகளை சேமிப்பது, பாதுகாப்பது மற்றும் அதன் இறையாண்மை போன்ற விஷயங்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

@block_B@ இந்திய ஐபோன் ஏற்றுமதி 75% உயர்வு நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் - செப்டம்பர் காலகட்டத்தில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் ஏற்றுமதி 88,730 கோடி ரூபாயை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் 50,248 கோடி ரூபாயாக இருந்த நிலையில், நடப்பாண்டு 75 சதவீதம் அதிகரித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் புதிய ஐபோன் மாடல்கள் அறிமுகப்படுத்தப்படும் என்பதால் வழக்கமாக ஏற்றுமதி குறைவாகவே இருக்கும். இருப்பினும் நடப்பாண்டு செப்டம்பரில் ஏற்றுமதி 155 சதவீதம் அதிகரித்து 11,000 கோடி ரூபாயை எட்டியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.block_B

Advertisement