'சூப்பரா' சுப்மன்... ஜோரா ஜடேஜா * இன்னொரு வெற்றியை நோக்கி இந்தியா

புதுடில்லி: டில்லி டெஸ்டில் கேப்டன் சுப்மன் கில் சதம் விளாசினார். ஜடேஜா 'சுழல்' ஜாலம் நிகழ்த்த, இந்திய அணி சுலப வெற்றியை நோக்கி முன்னேறுகிறது.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இந்திய அணி, 2 விக்கெட்டுக்கு 318 ரன் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் (173), சுப்மன் (20) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஜெய்ஸ்வால் 'ஷாக்'
நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது ஓவரில் ரன் அவுட்டாகி திரும்பினார் ஜெய்ஸ்வால் (175). பின் சுப்மனுடன் இணைந்தார் நிதிஷ் குமார். இவர், 20 ரன்னில், வாரிகன் பந்தில் கொடுத்த கேட்ச்சை, பிலிப் தவறவிட்டார். வாய்ப்பை பயன்படுத்திய நிதிஷ், வாரிகன் ஓவரில் அடுத்தடுத்து சிக்சர், பவுண்டரி விளாசினார். இந்திய அணி 105 ஓவரில் 400/3 ரன்களை எட்டியது. மீண்டும் வாரிகன் பந்தில் சிக்சர் அடிக்க ஆசைப்பட்ட நிதிஷ் (43), சீலசிடம் 'பிடி' கொடுத்தார்.
சுப்மன் சதம்
அடுத்து வந்த துருவ் ஜுரெல், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சுப்மன் கில், டெஸ்டில் 10 வது சதம் (177 பந்து) கடந்தார். இரண்டாவது நாளில் 44.2 ஓவரில் இந்திய அணி 200 ரன் எடுத்தது. ஜுரெல் (44) அவுட்டாக, இந்திய அணி முதல் இன்னிங்சில் 518/5 ரன் எடுத்த நிலையில், 'டிக்ளேர்' செய்தது. சுப்மன் (129) அவுட்டாகாமல் இருந்தார்.
ஜடேஜா 'மூன்று'
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஜான் கேம்பெல், ஷிவநரைன் சந்தர்பால் மகன் டேகநரைன் சந்தர்பால் ஜோடி துவக்கம் தந்தது. 7வது ஓவரில் ஜடேஜாவை அழைத்தார் சுப்மன். இதற்கு கைமேல் பலன் கிடைத்தது. ஜடேஜாவின் இரண்டாவது பந்தில் கேம்பெல் (10) அவுட்டானார்.
டேகநரைன், அதானசே இணைந்து அணியை (81/1) மீட்டனர். 28 வது ஓவரை வீசினார் ஜடேஜா. முதல் பந்தில் சிக்சர் அடித்த டேகநரைன் (34), 3வது பந்தில் ராகுலிடம் கேட்ச் கொடுத்தார்.
அதானசேவை (41) வெளியேற்றினார் குல்தீப். மீண்டும் மிரட்டிய ஜடேஜா, கேப்டன் ராஸ்டன் சேசை, 'டக்' அவுட்டாக்க, 107/4 என திணறியது வெஸ்ட் இண்டீஸ்.
ஷாய் ஹோப் (31*), டெவின் (14*) இணைந்து விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தினர். இரண்டாவது நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 140/4 ரன் எடுத்து, 378 ரன் பின் தங்கி இருந்தது.
ஜடேஜா 3 விக்கெட் சாய்த்தார்.
இன்று மூன்றாவது நாளில், கைவசம் 6 விக்கெட் மீதமுள்ள நிலையில், 'பாலோ ஆனை' தவிர்க்க, வெஸ்ட் இண்டீஸ் இன்னும் 179 ரன் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஜெய்ஸ்வால் 'ரன் அவுட்'
நேற்று சீலஸ் பந்தை அடித்தார் ஜெய்ஸ்வால். வேகமாக ஒரு ரன்னுக்கு ஓடிவந்தார். பந்து பீல்டர் கைக்கு செல்வதை பார்த்துக் கொண்டிருந்த சுப்மன், ஜெய்ஸ்வால் வருவதை கவனிக்கவில்லை. இதற்குள் பாதி துாரம் வந்து விட்ட ஜெய்ஸ்வால், வேறு வழியில்லாத நிலையில் மீண்டும் கிரீசை நோக்கி திரும்பி ஓடினார். இதற்குள் ரன் அவுட் செய்யப்பட, 175 ரன்னில் விரக்தியுடன் வெளியேறினார். இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பு நழுவியது.
இந்திய சுழல் ஜாம்பவான் கும்ளே கூறுகையில்,'' பந்து நேராக 'மிட் ஆப்' பீல்டர் கைக்கு செல்கிறது. ஒரு ரன் எடுக்க வாய்ப்பே இல்லை. இதை கவனிக்காமல் ஓடி வந்த ஜெய்ஸ்வால் மீது தான் தவறு உள்ளது,'' என்றார்.
* அதிக ரன் எடுத்து, ரன் அவுட்டான இந்திய வீரர்கள் வரிசையில் ஜெய்ஸ்வால் (175), மூன்றாவது இடம் பிடித்தார். முதலிடத்தில் மஞ்ச்ரேகர் (218ல் ரன் அவுட், 1989, பாக்.,) உள்ளார். இரு முறை (2002ல் 217, இங்கிலாந்து, 2001ல் 180, ஆஸி.,) இதுபோல அவுட்டான டிராவிட், இரண்டாவது இடத்தில் உள்ளார்.

சுதர்சன் காயம்
ஜடேஜா பந்தை வேகமாக அடித்தார் கேம்பெல். அருகில் 'ஷார்ட் லெக்' பகுதியில் நின்றிருந்த சாய் சுதர்சனின் வலது கை, 'ஹெல்மெட்' தடுப்பில் மோதி கீழே விழ, பந்தை அப்படியே மார்போடு அணைத்துக் கொண்டார். எப்படியும் பவுண்டரி சென்று விடும் என நம்பிய கேம்பெல், அவுட்டான அதிர்ச்சியுடன் கிளம்பினார். வலியால் துடித்த சாய் சுதர்சன், மைதானத்தை விட்டு கிளம்பினார். இவருக்கு 'ஐஸ்' ஒத்தடம் கொடுக்கப்பட்டது.

பிராட்மேனை முந்தினார்
இந்திய அணி டெஸ்ட் கேப்டனாக, ஒரு ஆண்டில் அதிக சதம் அடித்த வீரர்களில் கோலியை (2017, 2018 ல் தலா 5 சதம்) சமன் செய்து முதலிடம் பிடித்தார் சுப்மன் (2025ல் 5 சதம்). சச்சின் (4) அடுத்து உள்ளார்.
* டெஸ்டில் கேப்டனாக அதிவேகமாக 5 சதம் அடித்தவர்களில் இங்கிலாந்தின் அலெஸ்டர் குக் (9 இன்னிங்ஸ்), இந்தியாவின் கவாஸ்கர் (10) அடுத்து, பிராட்மேனை (13, ஆஸி.,) முந்தி, 3வது இடம் பிடித்தார் சுப்மன் (12).
* போட்டி அடிப்படையில் வேகமாக 5 சதம் அடித்த கேப்டன்களில் குக் (5 டெஸ்ட்), கவாஸ்கருக்கு (6) அடுத்து பிராட்மேனுடன் (7) இணைந்து மூன்றாவது இடம் பெற்றார் சுப்மன் (7).

முதன் முறை
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்டில் (டில்லி) இந்திய அணியின் முதல் 5 விக்கெட் 'பார்ட்னர்ஷிப்பும்' இணைந்து 50 அல்லது அதற்கும் மேல் (58, 193, 74, 91, 102) என முதன் முறையாக ரன் எடுத்தது. தவிர, 1960க்குப் (ஆஸி., காபா டெஸ்ட்) பின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக, இப்படி ரன் எடுக்கப்பட்டது இதுதான் முதன் முறை.
* 1993ல் இங்கிலாந்து (மும்பை), 2023ல் ஆஸ்திரேலியா (ஆமதாபாத்), தற்போது வெஸ்ட் இண்டீஸ் என இந்தியா, மூன்றாவது முறையாக இதுபோல ரன் எடுத்தது.

Advertisement