ஆப்கன் படை தாக்குதலில் பாக்., ராணுவ வீரர்கள் 58 பேர் பலி

11

காபூல்: ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் தீவிரம் அடைந்துள்ளது.

ஆப்கன் நடத்திய தாக்குதலில் பாக் ராணுவ வீரர்கள் 58 பேர் பலியாகினர்.


நம் அண்டை நாடான பாகிஸ்தான், தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானுடன் மற்றொரு பக்கம் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து செயல்படும் டி.டி.பி., எனப்படும் தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு, பாகிஸ்தான் மீது அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

சமீபத்தில் பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில், ஆப்கனின் டி.டி.பி., அமைப்பு நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் ராணுவ அதிகாரிகள் உட்பட பல வீரர்கள் கொல்லப்பட்டனர். தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ள தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் நுார் வாலி மெஹ்சுத்தை குறிவைத்து, பாகிஸ்தான் நடத்திய எல்லை தாண்டிய வான்வழி தாக்குதலால் இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.



இந்நிலையில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், எல்லையில் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக தலிபான் படைகள் தாக்குதல் நடத்தினர். துராந்த் எல்லை பகுதியில் தங்கள் ராணுவம் நடத்திய தாக்குதலில் நடந்தது பற்றி ஆப்கன் அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


ஆப்கன் தலிபான் அரசின் செய்தி தொடர்பாளர் ஜபியுல்லா முஜாகித் கூறுகையில், ''ஆப்கன் ராணுவத்தினரின் தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 58
பேர் கொல்லப்பட்டவர். 30 பேர் படுகாயம் அடைந்தனர்.


ஆப்கன் தரப்பில் 9 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், 14 வீரர்கள் காயம் அடைந்தனர். பாகிஸ்தான் ராணுவத்தின் 20 சோதனை சாவடிகள் முற்றிலும் அழிக்கப்பட்டன. ஆப்கன் ராணுவத்தின் தாக்குதல் கத்தார் மற்றும் சவுதி அரேபியா நாடுகளின் வேண்டுகோளை ஏற்று நிறுத்தப்பட்டு உள்ளது, என்றார்.


இது குறித்து தலிபான் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எனாயத் கூறியதாவது: பாகிஸ்தானுக்கு எதிராக நள்ளிரவில் வெற்றிக்கரமாக தாக்குதல் நடத்தப்பட்டது. மீண்டும் ஆப்கானிஸ்தானின் எல்லைக்குள் அத்துமீறினால், எங்கள் பாதுகாப்பு படைகள் தங்கள் நாட்டை பாதுகாக்கத் தயாராக உள்ளன. மேலும் தக்க பதிலடி கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


இந்த மோதல்களின் போது பாகிஸ்தான் ஆயதங்கள் அழிக்கப்பட்டது என ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் ராணுவம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.

Advertisement