அரசின் குறட்டையை அம்பலமாக்கிய இருமல் மருந்து விவகாரம்: 15 ஆண்டாக ஆய்வுக்குப் போகாத அதிகாரிகளால் அதிர்ச்சி!

நமது நிருபர்
ம.பி.,யில் 21 குழந்தைகள் இறப்புக்கு காரணமான இருமல் மருந்து நிறுவனத்தில் 15 ஆண்டாக தமிழக அரசு ஆய்வு செய்யவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் 1 - 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதுவரை 21 குழந்தைகள் உயிரிழப்புக்கு, அவர்கள் உட்கொண்ட 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து தான் காரணம் என்பது தெரியவந்தது. இந்த மருந்து தமிழகத்தில் தான் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தின் காஞ்சிபுரத்தில், கோல்ட்ரிப் மருந்தை தயாரித்த, 'ஸ்ரீசன் பார்மா' நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது.
அதன் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கை கூட மாநில அரசு எடுக்கவில்லை. ம.பி.,யில் இருந்து தமிழகம் வந்த அம்மாநில போலீசார் தான் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். மறுபக்கம், 'ஸ்ரீசன்' நிறுவனத்தின் முறையற்ற செயல்பாடுகளில், தமிழக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம், சரியாக கவனம் செலுத்தாததே காரணம் என்பது தற்போது அம்பலமாகி உள்ளது.
அதுமட்டுமின்றி மருந்து நிறுவனத்துக்கு, டி.என்.எப்.டி.ஏ., எனப்படும், தமிழக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம், 2011ல் உரிமம் வழங்கியது. இந்த நிறுவனத்தின் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்காதது குறித்து அடுக்கடுக்கான கேள்விகள் எழுகிறது.
* இந்த நிறுவனத்தில் 15 ஆண்டுகளாக தமிழக அரசு அதிகாரிகள் எந்த ஆய்வும் மேற்கொள்ளவில்லை.
* மோசமான உட்கட்டமைப்புடனும், தேசிய மருந்து பாதுகாப்பு விதிகளை மீறியும், இந்த நிறுவனம் செயல்பட்டது. இருப்பினும், 15 ஆண்டுகளாக செயல்படும் இந்த நிறுவனத்தின் மீது, தமிழக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாக துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
* நிறுவனங்களின் தயாரிப்புகள், மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின், 'சுகம்' இணையதளத்தின் வாயிலாக புதுப்பிக்கப்பட வேண்டும். இந்த நிறுவனம், தங்கள் தயாரிப்புகளை புதுப்பிக்கவில்லை.
* குழந்தைகள் இறப்பு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததை தொடர்ந்து, கடந்த 8ம் தேதி தமிழகம் வந்த மத்திய பிரதேச போலீசார், இருமல் மருந்து நிறுவன உரிமையாளரை கைது செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
21 குழந்தைகள் இருமல் மருந்து குடித்து உயிரிழக்க காரணமான ஸ்ரீசன் மருந்து நிறுவனத்தின் மீது இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன?
மருத்துவத் துறை சார்பில் சுற்றறிக்கை, அல்லது அரசாணை ஏதேனும் வெளியிடப் பட்டதா?
ஏற்கனவே மருந்து கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்ட மருந்துகள் விற்பனைக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிடப்பட்டதா?
தமிழகம் முழுவதும் உள்ள மருந்து கடைகளில் இருந்து ஸ்ரீசன் நிறுவன மருந்துகள் முழுமையாக அகற்றப்பட்டதை உறுதி செய்ததா அரசு?
21 அப்பாவி குழந்தைகள் உயிரிழக்க காரணமான இந்த நிறுவன மருந்துகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுவது குறித்து செய்தித் தாள்களில், ஊடகங்களில் ஏதேனும் விளம்பரம் வெளியிடப்பட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நச்சுத்தன்மை உடைய இருமல் மருந்தை குடித்து குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தால் நாடே கலங்கிப்போயிருக்கிறது. இந்த பிரச்னையின் அவசர அவசியத்தை கருத்தில் கொண்டு, உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.











மேலும்
-
எகிப்தில் நாளை கையெழுத்தாகும் காசா அமைதி ஒப்பந்தம்: பிரதமர் மோடிக்கு அழைப்பு
-
பாகிஸ்தான் சோதனைச்சாவடிகளை கைப்பற்றியது தலிபான் ராணுவம்!
-
ஓயாத நோபல் அமைதிப்பரிசு சர்ச்சை; விருதாளர் பெயர் முன்கூட்டியே கசிந்து விட்டதாக புகார்!
-
ஆபரேஷன் புளூஸ்டார் தவறு; சிதம்பரம் ஒப்புதல்!
-
மெக்சிகோவில் விடாது பெய்யும் மழை: பலி 41 ஆக உயர்வு
-
மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவிக்கு நேர்ந்த கொடூரம்; 3 பேர் கைது