மலேசிய தொழிலதிபர் மீது லண்டனில் தாக்குதல்: கொள்ளையர்களை எதிர்த்து தீரமுடன் போராடிய மனைவி

லண்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசிய தொழிலதிபர் லண்டனில் வழிப்பறி கொள்ளையர்களால் தாக்கப்பட்டார். அவருடன் இருந்த மனைவி, தீரமுடன் போராடி அவரை காப்பாற்றினார்.
மலேசியாவை சேர்ந்த பெட்ரா குழுமத் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான வினோத் சேகர், தெற்கு லண்டனில் தான் தாக்கப்பட்டது குறித்து, பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
ஆக்ஸ்போர்டில் குடும்பத்தினருடன் இசை நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு பேட்டர்ஸீ பவர் ஸ்டேஷன் அருகே உள்ள என் மகளின் பிளாட்டிற்கு இரவில் திரும்பிக் கொண்டிருந்தபோது, அங்கு திடீரென வந்த இரண்டு பேர் என்னைத் தாக்கினர். கையில் இருந்த கைக்கடிகாரம் உடைந்தது. காயத்தால் ரத்தம் வடிந்தது. அவர்களுடன் போராட முயற்சித்தேன். ஆனால் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்ட காரணத்தால், என்னால் முடியவில்லை. -
அப்போது என் மனைவி வினி யீப் தீர்க்கமாக செயல்பட்டார். தனது பணப்பையை காட்டியபடி, கூச்சல் போட்டு கொள்ளையர்களை எதிர்கொண்டார். பெண் சிங்கம் போல அவர் எதிர்த்து நிற்பதை கண்ட கொள்ளையர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
லண்டன் போலீஸ் அதிகாரிகள் சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் என்னிடம், 'நீங்கள் அதிர்ஷ்டசாலி. நீங்கள் அவர்களிடம் உடைமைகளை கொடுக்காமலிருந்தால் காயம் அடைந்திருப்பீர்கள்' என்றும் கூறினார்.
லண்டனை ஒப்பிடும்போது கோலாலம்பூர் உலகின் மிகவும் பாதுகாப்பான, நகரங்களில் ஒன்றாக உள்ளது. அதற்கு பெரும் நன்றி. இன்று உலகில் குறைபாடுகள் இருந்தாலும், சில விதிவிலக்கான மக்கள் இருக்கிறார்கள். இந்த கொடுமையிலும் கருணை இன்னும் உலகில் உள்ளது.
பொருட்களை காட்டிலும், உயிரும், உறவுகளும் பல கோடி மடங்கு விலை உயர்ந்தவர்கள். விலை உயர்ந்த கடிகாரம் அணிவது, மணி பர்ஸ் வைத்திருப்பது, அனைத்து தெருக்களும் பாதுகாப்பானவை என்று நினைப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கிறேன்.
உங்களுக்கு இதுபோன்ற ஏதாவது நடந்தால், அதை மறந்துவிடுங்கள். ஒரு கடிகாரம், ஒரு பணப்பை, ஒரு மொபைல் போன் என அனைத்தையும் புதிதாக வாங்கிக்கொள்ள முடியும் ஆனால், உங்கள் உயிர், உங்கள் உறவுகள், நண்பர்களை ஒருபோதும் இழக்க முடியாது.
எச்சரிக்கையாக இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். கொள்ளையடிக்க முடியாத விஷயங்களுக்கு - ஒவ்வொரு நாளும் - நன்றியுடன் இருங்கள்.
இவ்வாறு சமூக அக்கறையுடன் வினோத் சேகர் பதிவிட்டுள்ளார்.