நடிகர் விஜய் பெயரை உச்சரிக்காமல் தவிர்த்த முதல்வர் ஸ்டாலின்!

33

சென்னை: சட்டசபையில் இன்று பேசிய முதல்வர் ஸ்டாலின் நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் பெயரை உச்சரிக்காமல் கரூர் சம்பவம் குறித்து நீண்ட விளக்கம் அளித்தார்.

தமிழக சட்டசபைக்கூட்டத் தொடர் 2வது நாளாக இன்று கூடியது. அவையில் முக்கிய நிகழ்வாக கரூர் சம்பவம் பற்றிய விவாதம் இடம்பெற்றது.

இந்த சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் நீண்ட விளக்கம் ஒன்றை வாசித்தார். அவர் பேசிய அந்த உரையில், கரூர் சம்பவத்தில் நடந்தது என்ன? அரசின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மருத்துவ உதவிகள், கரூருக்கு தான் சென்ற விவரம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் புள்ளி விவரங்களுடன் தெரிவித்தார்.

மொத்தம் அவரின் உரை 16 நிமிடங்கள் அடங்கி இருந்தது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் விளக்கத்தில் எந்த இடத்திலும் நடிகர் விஜய் பெயரை அவர் உச்சரிக்கவே இல்லை.

அக்கட்சித் தலைவர், தமிழக வெற்றிக்கழக கட்சியின் தலைவர், அவரின் அரசியல் நிகழ்ச்சி, இந்த கட்சியின் (தவெகவை குறிப்பிடுகிறார்) நிகழ்ச்சி, தவெக கட்சியின் தலைவர் என்றுதான் உரையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிட்டத்தட்ட 16 நிமிடங்கள் பேசிய அவரின் உரையில் எந்த இடத்திலும் நடிகர் விஜய் என்றோ, விஜய் என்றோ அல்லது தவெக தலைவர் விஜய் என்றோ குறிப்பிடவும் இல்லை, உச்சரிக்கவும் இல்லை.

இது குறித்து அரசியல் வல்லுநர்கள் கூறியதாவது;

பொதுவாக அரசியல் களத்தில் வளர்ந்து வரும் அல்லது மக்களின் அங்கீகாரம் பெறாத (ஓட்டுகள் வாயிலாக அல்லது ஓட்டு சதவீதத்தின் அடிப்படையில்) கட்சிகளின் பெயர்களையும் அவர்களின் செயல்களையும் கவனமாக கையாள்வது திமுகவின் அரசியல் ஸ்டைல்.

அதாவது எந்த சந்தர்ப்பத்திலும், எத்தகைய சூழலில் பெயர்களை உச்சரிக்காமல் (அவர்கள் பாணியில் முக்கியத்துவம் தராமல்) தவிர்ப்பதில் திமுக கவனமாக செயல்படும் கட்சி.

விஜய்யை பற்றியோ, அவரின் கட்சியை பற்றியோ பெரிதாக பேச வேண்டாம், பெரிதுபடுத்த வேண்டாம் என்று அமைச்சர்கள், முதல்கட்ட மற்றும் 2ம் கட்ட தலைவர்களுக்கு ஏற்கனவே கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் தான் விஜய் பெயரை குறிப்பிடாமல் பேசியிருக்கிறார் முதல்வர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement