எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி, ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி: இபிஎஸ் ஆவேச பேட்டி

20

சென்னை: இந்த அரசாங்கம் எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி, ஆளுங்கட்சிக்கு ஒரு நீதியாக தான் பார்க்கப்படுகிறது என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் குற்றம்சாட்டி உள்ளார்.


சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நிருபர்களிடம் கூறியதாவது: கரூர் சம்பவம் தொடர்பாக சட்டசபையில் பேச எங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. நாங்கள் கருத்து கூறிய பிறகு முதல்வர் பதில் அளிக்க வேண்டும் என சட்டசபையில் கேட்டோம். கரூரில் உரிய பாதுகாப்பை கொடுத்திருந்தால் உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம்.

ஆனால் இந்த அரசாங்கம் எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி, ஆளுங்கட்சிக்கு ஒரு நீதியாக தான் பார்க்கப்படுகிறது. அது எந்த எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, அந்த அடிப்படையில் முழுமையான பாதுகாப்பு வேலுச்சாமிபுரத்தில் நடந்த கூட்டத்திற்கு அளிக்கவில்லை.
கரூர் சம்பவத்திற்கு பாதுகாப்பு குறைபாடே காரணம். இந்த அரசின் அலட்சியத்தால் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.



கூட்டம் நெரிசல் நடந்த இடத்தில் 500 போலீசார் எல்லாம் இல்லை. நான் ஊடகங்களில் பார்த்தேன். தெளிவாக தெரிகிறது. தமிழக வெற்றிக் கழகத்தலைவர் பேசும் போது அந்த இடத்தில் எத்தனை போலீசார் இருந்தார்கள். ஏடிஜிபி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுக்கும் போது போலீசார் 500 பேர் பாதுகாப்பு பணியில் இருந்ததாக சொல்கிறார்கள். இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின் 660 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக சொல்கிறார். இதிலே முரண்பட்ட கருத்து. இதனால்தான் மக்களுக்கு மிகப்பெரிய சந்தேகம் எழுந்திருக்கிறது.


எங்களுக்கு நிராகரித்த இடத்தை தவெகவிற்கு எதற்காக அரசு கொடுத்தது? அசம்பாவிதம் நடக்க வேண்டும் என திட்டமிட்டு வேலுச்சாமி புரத்தில் இடத்தை கொடுத்ததாக மக்களும் சந்தேகிக்கின்றனர். அவசர அவசரமாக ஒரு நபர் ஆணையத்தை எப்படி அமைக்க முடியும். உண்மை சம்பவத்தை மறைக்க அரசு நினைக்கிறது.


ஒரு நபர் ஆணையம் முறையாக செயல்பட எந்த உதவியும் செய்யவில்லை. தவெக தலைவர் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பத்து நிமிடம் பேசியிருப்பார். அப்போது ஒரு செருப்பு வந்து விழுகிறது. சட்டசபையில பேசினா, நீக்கிவிடுவார்கள்: அதனால் மக்களுக்கு தெரிவிக்க ஊடகங்கள் வாயிலாக பேசுகிறேன். கரூர் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை; மக்களுக்காக பேசுகிறோம். கரூர் பற்றி பேசினால் ஆளும் கட்சியினருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்? இவ்வாறு இபிஎஸ் கூறினார்.

Advertisement