அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை; ஜப்பான் பிரதமர்

டோக்கியோ: 550 பில்லியன் டாலர் முதலீடு குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை என்று ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி தெரிவித்துள்ளார்.

பிற நாடுகளைப் போல ஜப்பானுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் 25 சதவீத வரியை விதித்தார். இந்த நடவடிக்கை பெரும்பாலான பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் ஜப்பானுக்கு அதிருப்தியை அளித்தது.

இந்த சூழலில், ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த மாதம் பிரதமராக பொறுப்பேற்பதற்கு முன்பு, ஜப்பானின் தேசிய நலன்களை பாதிக்கும் வகையில் இருந்தால், அமெரிக்காவுடன் மீண்டும் வரிவிதிப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படாது என்று தகைச்சி திட்டவட்டமாக கூறியிருந்தார்.

இதனிடையே, கடந்த வாரம் டோக்கியோவில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன், முதல்முறையாக சனே தகைச்சியை சந்தித்து பேசினார். வரிவிதிப்பு விவகாரத்தால் ஜப்பானுடன் முரண்பாடு ஏற்பட்ட நிலையில், டிரம்ப்பின் இந்தப் பயணத்தின் போது, அமெரிக்காவில் 550 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் ஜப்பானின் திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது பற்றி எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், தென்கொரியாவின் கியோங்ஜூவில் நடந்த ஆசிய - பசிபிக் பிராந்தியத்தின் வருடாந்திர கூட்டத்தில் தகைச்சி கலந்து கொண்டார். அப்போது, சீன அதிபர் சி ஜின்பிங் மற்றும் தென் கொரிய அதிபர் லீ ஜே மியங் ஆகியோரை சந்தித்து பேசினார்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ஜப்பான் பிரதமர் தகைச்சி, "550 பில்லியன் டாலர் முதலீடு குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை. ஜப்பானுக்கும், சீனாவுக்கும் இடையே நிலையான உறவை கட்டியெழுப்ப உறுதி பூண்டுள்ளோம்," என்று அவர் கூறினார்.

ஜப்பான் பிரதமரின் இந்த அறிவிப்பு அமெரிக்காவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Advertisement