தட்டை பயறு அறுவடை துவக்கம் விரைவில் சந்தைகளில் விற்பனை


கரூர், கரூர் மாவட்டத்தில், தட்டை பயறு அறுவடை விறுவிறுப்பாக துவங்கியுள்ளது.

கடந்த ஜூலை மாத இறுதியில், கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆற்றுப்பகுதிகளான புகழூர், வாங்கல், நெரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, வெள்ளியணை, ராஜபுரம், சின்னதாராபுரம், க.பரமத்தி, அரவக்குறிச்சி மற்றும் கடவூர் உள்ளிட்ட பகுதிகளில், மானாவாரி நிலங்களில் பயறு வகைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. அதில், ஊடுபயிராக தட்டை பயறு அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டது. காய் பிடிக்கும் பருவத்தில், மழை பெய்ததால் தட்டை பயறு நல்ல மகசூலை அடைந்துள்ளது.

இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது:
கடந்த மூன்று மாதங்களாக காவிரியாற்றில் தண்ணீர் செல்கிறது. இதனால், கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், கரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக மழை, திருப்திகரமாக உள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, விவசாய கிணறுகளில் தண்ணீர் அதிகரித்துள்ளது. இதனால், மானாவாரி நிலங்களில் பயறு வகைகள் நல்ல விளைச்சலை அடைந்துள்ளது. அதில், தட்டை பயிறு அறுவடை துவங்கியுள்ளது.
விவசாய நிலங்களை தேடி மொத்த வியாபாரிகள் வருகின்றனர். வெளி மார்க்கெட்டில், ஒரு கிலோ தட்டை பயிறு, 120 ரூபாய் வரை விற்கிறது. இதனால், ஒரு கிலோ தட்டை பயறுக்கு, 70 ரூபாய் முதல், 80 ரூபாய் வரை கேட்கிறோம். ஆனால், 50 ரூபாய் முதல், 60 வரை விலை கிடைக்கிறது. அடுத்த மாதத்தில் கிராம சந்தைகளில், பயறு வகைகள் அதிகளவில், குறைந்த விலைக்கு விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement