வாய்க்காலில் ஆகாயத்தாமரை அகற்ற நடவடிக்கை தேவை

கரூர், கரூர் முனியப்பன் கோவில் அருகேயுள்ள வாய்க்காலில், ஆகாயத்தாமரை உள்பட செடி, கொடிகள் ஆக்கிரமித்துள்ளன.


கரூர் அருகே செட்டிபாளையத்தில், அமராவதி தடுப்பணையிலிருந்து பாசன வாய்க்கால்கள் பிரிந்து செல்கின்றன. அவ்வாறு செல்லும் வாய்க்கால்களில் ராஜ வாய்க்கால் ஒன்றாகும். ராஜவாய்க்காலில் இருந்து ஈரோடு-, கோவை சாலை பிரியும் முனியப்பன் கோவில் அருகே, பஞ்சமாதேவி ஆயக்கட்டு வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இந்த பஞ்சாமதேவி ஆயக்கட்டு வாய்க்கால் மூலம், 800 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும், இந்த வாய்க்கால் திருமுக்கூடலுார் வரை சென்று, அமராவதி ஆற்றில் கலக்கிறது.


இவ்வாறு செல்லும் வாய்க்காலில் பல்வேறு இடங்களில் ஆகாயத்தாமரை உள்பட முட்புதர்கள் மண்டி செடி, கொடிகள் முளைத்தும் காணப்படுகிறது. மேலும் வாய்க்காலில் ஆங்காங்கே குப்பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் தொற்று அபாயம் உள்ளது. வாய்க்காலை துார்வாரி செடி கொடிகளை அகற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement